தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-;

Update:2022-03-28 22:56 IST

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

ஆபத்தான மின்கம்பம் 

கோத்தகிரியில் இருந்து மிளிதேன் கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் அரசு பள்ளி அருகே உயர் அழுத்த மின் கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் வளைந்த நிலையில் எந்த நேரத்திலும் கீழே விழக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் இதுவரையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆபத்தான முறையில் இருக்கும் இந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.
நாகராஜ், கோத்தகிரி.

பழுதான குடிநீர் குழாய் 

  கூடலூர் பகுதியில் பல இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. அதிலும் குறிப்பாக அரசு மேல்நிலைப்பள்ளி பகுதி, ராக்லேண்ட் தெரு, கெவிப்பாரா, ஹெல்த் கேம்ப், நகராட்சி விருந்தினர் மாளிகை ஆகிய பகுதிகளில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. ஏற்கனவே பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில் தற்போது இங்கு தண்ணீர் வீணாக வெளியேறுவதால் மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  முஸ்தபா, கூடலூர்.

துர்நாற்றத்தால் பயணிகள் அவதி

  பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் நுழையும் பகுதியில் இரவு மற்றும் அதிகாலை நேரம் பலர் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால், பஸ் நிலையத்தில் திருப்பூர் செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் அதிகளவில் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக இங்கு வரும் பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடத்து இங்கு சிறுநீர் கழிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  உதயகுமார், பொள்ளாச்சி.

வீணாகும் குடிநீர்

  கோவை அருகே உள்ள எட்டிமடை பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த ஒரு வாரமாக வீணாகி வருகிறது. தற்போது பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில், இங்கு குடிநீர் வீணாகி செல்வதால், இந்த திட்டத்தால் பயன்பெற்று வரும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்டு உள்ள உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
  கார்த்திக், எட்டிமடை.

  தினத்தந்தி செய்தி எதிரொலி:
குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது

  கோவை பீளமேடு கவுதமபுரி நகரில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் கடந்த 26-ந் தேதி செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் நேற்று இந்த பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
  சுப்பிரமணியம், கவுதமபுரி நகர்.

தெருநாய்கள் தொல்லை

  கோவை மாநகராட்சி 49-வது வார்டு பாப்பநாயக்கன்பாளையம் என்.ஜி.ராமசாமி சாலையில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. தெருவில் கூட்டங்கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள், அந்த வழியாக தனியாக நடந்து செல்பவர்களை துரத்துகிறது. அதுபோன்று இருசக்கர வாகனங்களில் செல்லும்போது குறுக்கே விழுவதால் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
  கோபாலகிருஷ்ணன், பாப்பநாயக்கன்பாளையம்.

முன்னெச்சரிக்கை தேவை

  கொரோனா பரவல் குறைந்து உள்ள நிலையில், வரும் ஜூன் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். இந்த நிலையில் வரும் மே மாதத்தில் ஊட்டியில் கோடை விழா கொண்டாடுவதால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். எனவே கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, கொரோனா பரவுவதை தடுக்க வேண்டும்.
  ராஜேஷ்கோபால், அரவங்காடு.

இறைச்சி கழிவுகள்

  பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சமத்தூரில் ராம ஐயங்கார் நகராட்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளியை ஒட்டி குடிநீர் தொட்டி இருக்கும் இடத்துக்கு செல்லும் சாலையில் இறைச்சி கழிவுகள் உள்பட ஏராளமான கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் பள்ளி மாணவர்கள் பொதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.
  பரதன், சமத்தூர்.

வெளிச்சம் இல்லாத மின்விளக்குகள்

  பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. இங்கு சாலை ஓரத்தில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு இருப்பதால் போதிய வெளிச்சம் இல்லை. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மின்விளக்குகள் அமைத்தால் வெளிச்சமாக இருக்கும். அதற்கு அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும்.
  கோபாலகிருஷ்ணன், பொள்ளாச்சி.
  
  

மேலும் செய்திகள்