பொள்ளாச்சியில் 75 சதவீத அரசு பஸ்கள் ஓடாததால் பயணிகள் அவதி
மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம் காரணமாக பொள்ளாச்சியில் 75 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை. கோரிக்கையை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 92 பேரை போலீசார் கைது செய்தனர்.;
பொள்ளாச்சி
மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம் காரணமாக பொள்ளாச்சியில் 75 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை. கோரிக்கையை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 92 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொது வேலை நிறுத்தம்
தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிடுதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து, பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக 2 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. அதன்படி பொதுவேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
இதையொட்டி பொள்ளாச்சியில் ஒரு சில அரசு பஸ்கள் மட்டும் இயங்கின. இதனால் தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கூட்ட நெரிசலால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
மாணவ-மாணவிகள் அவதி
மேலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் பஸ் கிடைக்காமல் சிரமம் அடைந்தனர். போதிய பஸ் இயக்காததால் பொள்ளாச்சி பழைய, புதிய பஸ் நிலையங்கள் பஸ்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.
பொள்ளாச்சியில் 75 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. 28 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. கேரளாவுக்கு பொள்ளாச்சியில் இருந்து பஸ்கள் ஓடவில்லை. இதனால் கேரளாவுக்கு செல்லும் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர்.
கிராமப்புறங்களுக்கு சில டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் கிராமங்களில் இருந்து பல்வேறு தேவைக்காக பொள்ளாச்சிக்கு வர முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானர்கள்.
ஆட்டோக்கள் இயங்கின
இந்த நிலையில் வாடகை கார், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின. மேலும் பொள்ளாச்சியில் அனைத்து கடைகளும் திறந்து இருந்தன. ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான கிராமங்களுக்கு பஸ்கள் செல்லாததால் மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 180 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் காரணமாக 28 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன என்றனர்.
வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மேலும் பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில் உள்ள ஒரு வங்கி முன் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைவர் சீதாராமன் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.
வேலை நிறுத்தம் காரணமாக பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் உள்ள வங்கிகள் செயல்படவில்லை. இதனால் ரூ.30 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
தபால் நிலையம்
இதேபோன்று பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தபால் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. துணை தபால் நிலையம் மற்றும் கிளை தபால் நிலையங்கள் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக மூடப்பட்டன.
மேலும் தபால் ஊழியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு செயலாளர் ராஜகோபால் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சாலை மறியல்
அதுபோன்று அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் தொழிற்சங்கத்தினர் பஸ் நிலையம் முன் ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 92 பேரை கைது செய்தனர்.
போராட்டத்தில் எல்.பி.எப். கார்த்திகேயன், எச்.எம்.எஸ். மகாலிங்கம், சி.ஐ.டி.யூ. வேளாங்கண்ணிராஜ், சேதுராமன், பரமசிவம், விவசாய தொழிலாளர்கள் சங்க மகாலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.