பொள்ளாச்சி அருகே நிதி இல்லாததால் பாதியில் நிற்கும் தொகுப்பு வீடுகள்
பொள்ளாச்சி அருகே உள்ள கல்லாங்குத்துவில் நிதி இல்லாததால் தொகுப்பு வீடுகள் பாதியில் நிற்கின்றன. எனவே நடவடிக்கை எடுக்க மலைவாழ் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள கல்லாங்குத்துவில் நிதி இல்லாததால் தொகுப்பு வீடுகள் பாதியில் நிற்கின்றன. எனவே நடவடிக்கை எடுக்க மலைவாழ் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தொகுப்பு வீடுகள்
பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லாங்குத்துவில் மலைவாழ் மக்கள் உள்ளனர். இங்கு உள்ள மக்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் புதிய வீடுகள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அரசுகளின் பங்களிப்பு தொகை ரூ.2 லட்சத்து 10 ஆயிரமும், மலைவாழ் மக்களின் பங்களிப்பு தொகை ரூ.1½ லட்சம் சேர்த்து ஒரு வீட்டிற்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் செலவில் மொத்தம் 113 வீடுகள் கட்டும் பணி தொடங்கியது.
பாதியில் நிற்கின்றன
இதில் 79 வீடுகளுக்கு லெண்டல் கான்கீரிட் போடும் பணியும், 21 வீடுகளுக்கு மேல்தள கான்கீரிட் போடும் பணியும் முடிவடைந்து உள்ளது. இந்த நிலையில் அடுத்தக்கட்ட கட்டுமான பணிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கட்டுமான பணிகள் பாதியில் நிற்கிறது. கடந்த 1½ ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் நடைபெறாததால் பாதியில் நிற்கும் வீடுகள் சிதிலமடைய வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:-
நிதி ஒதுக்க வேண்டும்
எங்களுக்கு புதிதாக வீடுகள் கட்டுமான பணி தொடங்கியபோது மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால் போதிய நிதி ஒதுக்காததால் பணி பாதியிலேயே நிற்கிறது.
மேலும் கட்டுமான பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனம் தரமான பொருட்களை பயன்படுத்தவில்லை. இதனால் வீடுகளின் தரம் சரியாக இல்லை. ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு உள்ளது.
எனவே மலைவாழ் மக்களின் நலன் கருதி போதிய நிதியை ஒதுக்கி கட்டுமான பணிகளை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய் துறை, பேரூராட்சி அதிகாரிகளின் தலைமையில் தனிக்குழு அமைத்து கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.1 ¼ லட்சம் மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.