நெகமம் அருகே கப்பளாங்கரையில் அரசு நிலத்தில் அமைக்கப்பட்ட கொட்டகை அகற்றம்

நெகமம் அருகே கப்பளாங்கரையில் அரசு நிலத்தில் அமைக்கப்பட்ட கொட்டகை அகற்றப்பட்டது.;

Update:2022-03-28 22:57 IST
நெகமம்

நெகமம் அடுத்த கப்பளாங்கரை பரமசிவன் கோவில் அருகே அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இங்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு நிபந்தனையுடன் இலவச பட்டா வழங்கப்பட்டது. 

ஆனால் அங்கு வீடு கட்டப்படாததால் இந்த அந்த இடத்தில் கடந்த 2010-11-ம் ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.40 ஆயிரத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. 

இந்த நிலையில் அந்த இடம் தனக்கு சொந்தமானது என்று ஒருவர் அந்த இடத்தை சுற்றிலும் தற்காலிக வேலி அமைத்தார். இது குறித்த புகாரின்பேரில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் இலவச பட்டா நிலத்தை அரசு அனுமதியின்றி வேறு நபருக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

 இதையடுத்து அந்த பட்டா ரத்து செய்யப்பட்டதாக சப்- கலெக்டர் அறிவித்தார். பின்னர் அந்த நிலம் மீட்கப்பட்டதுடன் அங்கு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த இடத்தில் தகர கொட்டகை அமைக்கப்பட்டதுடன், டிராக்டர் மூலம் உழவு செய்யப்பட்டது. 

இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆக்கிரமித்து வைக்கப்பட்ட தகர கொட்டகையை அகற்றினார்கள். மேலும் இந்த நிலத்தை யாராவது ஆக்கிரமித்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

மேலும் செய்திகள்