தேசிய அளவிலான போட்டியில் காஞ்சீபுர மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்
தேசிய அளவிலான போட்டியில் காஞ்சீபுரம் மாணவி வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.;
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தனிநபர் பிரிவில் ஜம்ப்ரோப் (ஸ்கிப்பிங்) விளையாட்டு தொடர்பான தேசிய அளவிலான போட்டிகள் இந்த மாதம் 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் காஞ்சீபுரம் ராணி அண்ணாத்துரை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஜனனி (16). இவர் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தனிநபர் பிரிவில் ஜம்ப்ரோப் விளையாட்டில் ஒரு வெள்ளிப்பதக்கமும், ஒரு வெண்கலப்பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதே போல அதே பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மற்றொரு மாணவியான இனியா (16) இவரும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜம்ப்ரோப் விளையாட்டில் 3 வெண்கல பதக்கங்களையும் பெற்றுள்ளார். இந்திய அளவில் 450 பேரும், தமிழக அளவில் 27 பேரும் கலந்து கொண்டனர்.
இதில் காஞ்சீபுரத்தில் இருந்து 9 ஆண்கள், 2 பெண்கள் பங்கேற்றிருந்தனர். நீண்ட நேரம் சோர்வில்லாமல் குதித்தல், வேகமாக குதித்தல் என 6 வகைகளில் போட்டிகள் நடைபெற்றன.இதில் காஞ்சீபுரத்தில் ஒரே பள்ளியை சேர்ந்த 2 மாணவிகள் பங்கேற்று சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.