மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்
மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடந்தது.;
76 வீடுகள் அகற்றம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் திரு.வி.க.நகர் ஏரிக்கரை நீர்ப்பிடிப்பு பகுதியில் 124 குடும்பங்கள் நீர்நிலை புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி வாழ்ந்து வந்தனர்.
கடந்த 2019-ம் ஆண்டு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை அகற்ற வேண்டும் என்று தனிநபர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் நீர்பிடிப்பு பகுதியிலுள்ள வீடுகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், முதல் தவணையாக 124 வீடுகளில் 76 வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம்
இந்நிலையில் வீடுகளை இழந்த பொதுமக்களுக்கு மதுராந்தகம் அருகே உள்ள மோச்சேரி கிராமத்தில் உள்ள நிலத்தில் மாற்று இடம் அளிக்க அரசு தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அங்கு இடம் வழங்குவதற்கு மோச்சேரி பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 500-க்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அதனால் திரு.வி.க.நகர் நீர்ப்பிடிப்பு பகுதியில் வாழ்ந்து வந்த 76 வீடுகள் இடிக்கப்பட்டதால் தங்களுக்கு இன்று (நேற்று) மாலைக்குள் மாற்று இடமளிக்க வேண்டும் அப்படியில்லை என்றால், இன்று இரவே கலெக்டர் அலுவலகத்தில் குடியேற இருப்பதாக கூறினர்.
இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.