கோவையில் உற்பத்தியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்ய வசதியாக கன்டெய்னர் யார்டு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது

கோவையில் உற்பத்தியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்ய வசதியாக கன்டெய்னர் யார்டு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது;

Update:2022-03-29 19:26 IST

கோவை

கோவையில் உற்பத்தியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்ய வசதியாக கன்டெய்னர் யார்டு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொருட்கள் உற்பத்தி

தொழில் நகரமான கோவையில் மோட்டார் பம்ப், வால்வுகள், ஜவுளி எந்திரங்கள், ஜவுளி பொருட்கள் அதிகம் தயாரிக்கப்படு கிறது. அவை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

ஷார்ஜா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.கோவை நகரில் இருந்து சர்வதேச விமானங்கள் குறைவாக இயக் கப்படுகிறது. 


எனவே கோவையில் தயாரிக்கப்படும் பொருட்கள் கன்டெய்னர்களில் அடைக்கப்பட்டு லாரிகளில் ஏற்றி கேரள மாநிலம் கொச்சி துறைமுகம், தூத்துக்குடி துறைமுகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

காலதாமதம் தவிர்ப்பு

இதனால் கோவையில் உற்பத்தியாகும் பொருட்களை துறைமு கங்களுக்கு கொண்டு செல்வதற்கும், அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவதற்கும் தாமதம் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே கோவையிலேயே கன்டெய்னர் யார்டு அமைந்தால் ஏற்றுமதி பொருட்களை ஆய்வு செய்து சரி பார்த்து மத்திய அரசு அதிகாரிகள் இங்கேயே சான்றிதழ் வழங்கி விடுவார்கள். 

இதன் மூலம் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்படும். 

கன்டெய்னர் யார்டு

எனவே கோவை நகரில் கன்டெய்னர் யார்டு அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் குறித்த நேரத்தில் உற்பத்தி பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதன் மூலம் கூடுதல் ஆர்டர்கள்  கிடைக்கவும், வருவாய் அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் சமீரன், கொடிசியா, இந்திய தொழில் கூட்டமைப்பு, இந்திய தொழில் வர்த்தக சபை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இதில், கோவை நீலாம்பூர் அல்லது செட்டிப்பாளையம் பகுதியில் கன்டெய்னர் யார்டு அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இது குறித்து கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு கூறியதாவது

வேலை வாய்ப்பு

கோவை புறநகர் பகுதியில் 140 ஏக்கர் பரப்பளவில் கன்டெய்னர் யார்டு அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 

ரெயில்நிலையம், விமான நிலையத்துக்கு  எளிதாகவும், விரைவாகவும் செல்லும் வகையில் நீலாம்பூர் அல்லது செட்டிப்பாளையம் பகுதியில் கண்டெய்னர் யார்டு அமையும்.


 இதற்கான ஆரம்பகட்ட பணிகளை அரசின் ஒப்புதலுடன் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும். கன்டெய்னர் யார்டு அமைவதன் மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் பொருட்களின் உற்பத்தி அதிகரித்து தொழில்கள் மேம்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்