14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் 2வது நாளாக தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் 2வது நாளாக தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்;

Update:2022-03-29 19:35 IST

கோவை

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் நேற்று 2-வது நாளாக தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

14 அம்ச கோரிக்கைகள்

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை தொடர வேண்டும், 

மத்திய அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாட்கள் பொதுவேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது.


அதன்படி கோவை மாவட்டத்தில்  போராட்டம் தொடங்கியது. பெரும்பாலான மத்திய அரசு பணியாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. பொது போக்கு வரத்து முடங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வேலை நிறுத்த போராட்டம்

இந்தநிலையில்  2-வது நாளாக இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை கலெக்டர் அலுவலகம் அருகே பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.


இதில் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம், தங்கவேல், எச்.எம்.எஸ். நிர்வாகி டி.எஸ்.ராஜாமணி, வீராசாமி, ஐ.என்.டி.யூ.சி. சார்பில் சண்முகம், துளசிதாஸ் உள்பட அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினர் பங்கேற்றனர். 


இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தொழிற்சங்க கொடிகளை ஏந்தியவாறு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

 அவர்களுக்கு ஆதரவாக அங்கன்வாடி பணி யாளர்கள், உழைக்கும் மக்கள் மாமன்றம், ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு உள்பட பல அமைப்பினர் திரளாக கலந்து கொண்டனர்

பணிகள் பாதிப்பு

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் வங்கி, தபால் நிலையம் உள்ளிட்ட பொதுத்துறை அலுவலகங்களில் பணியாற்றுபவர்களும் கலந்து கொண்டனர்.

 இதனால் அந்த அலுவலகங்களில் பெரும்பாலான பணிகள் முடங்கின. இதேபோல் காந்திபுரத்தில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்கள், மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு கோஷம் எழுப்பினர்.

கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா காப்பீடு மண்டல அலுவலகத்தில் காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை தர்ணா போராட்டம் நடைபெற்றது. 

இதற்கு தலைவர் மாதேஷ்வரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப் பாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


இதில் நேசனல், ஓரியண்டல், யுனைடெட் இந்தியா, நியூ இந்தியா ஆகிய காப்பீடு நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர். கோவை-திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றதால் பணிகள் பாதிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்