சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய வக்கீல் மீது வழக்கு
சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய வக்கீல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.;
செங்கல்பட்டு பரணூர் சுங்கச்சாவடியில் நேற்று வழக்கம்போல சுங்கச்சாவடி ஊழியர்கள் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலித்து கொண்டிருந்தனர். அப்போது செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று சென்றது. அந்த காரில் செங்கல்பட்டு என்.ஜி.ஜி.ஓ. நகரை சேர்ந்த பெருமாள் என்பவர் பயணம் செய்தார். இவர் செங்கல்பட்டு கோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இவருக்கு முன்னால் சென்ற லாரி ஒன்றில் டிரைவரிடம் சுங்க கட்டணம் வசூலித்து விட்டு செய்யூர் தாலுகா திருமையலூர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (வயது 27) சாலையின் குறுக்கேயுள்ள ஆட்டோமெட்டிக் தடுப்பு கட்டையை போட்டுள்ளார். அந்த தடுப்பு கட்டை வக்கில் பெருமாளின் கார் மீது விழுந்தது.
இதனால் கோபம் அடைந்த பெருமாள் இது குறித்து சுங்கச்சாவடி ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் சுங்கச்சாவடி ஊழியர் வினோத்குமாரை வக்கீல் பெருமாள் கன்னத்தில் தாக்கினார். இது அங்குள்ள கணகாணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து வீடியோ ஆதாரங்களுடன் ஊழியர் வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில் செங்கல்பட்டு தாலுகா போலீசார் வக்கீல் பெருமாள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.