வால்பாறையில் வாடகை செலுத்தாத 40 கடைகளுக்கு சீல் வைப்பு
வால்பாறையில் வாடகை செலுத்தாத 40 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி ஆணையாளரிடம் கடைகாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
வால்பாறை
வால்பாறையில் வாடகை செலுத்தாத 40 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி ஆணையாளரிடம் கடைகாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாடகை செலுத்தவில்லை
வால்பாறையில் நகராட்சிக்கு சொந்தமாக 350 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு மாதந்தோறும் வாடகை செலுத்த வேண்டும். ஆனால் பல கடைகள் வாடகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே வாடகை கட்டாதவர்கள் உடனடியாக வாடகையை செலுத்துமாறு நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து 200-க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் வாடகையை செலுத்தினார்கள்.
100 கடைகளுக்கு வாடகை செலுத்தப்படவில்லை. எனவே அந்த கடைகளுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும் வாடகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
40 கடைகளுக்கு சீல்
இதையடுத்து நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் கடைகள் இருக்கும் இடத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்தனர். அந்த வகையில் மொத்தம் 40 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
அப்போது கடைகாரர்கள் சிலர், வாடகை செலுத்துவதில் பல்வேறு குளறுபடி உள்ளது. அதை சரிசெய்து கொடுங்கள் நாங்கள் வாடகை செலுத்துகிறோம் என்றுக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு உடனடியாக கடை வாடகையை செலுத்துங்கள் என்று ஆணையாளர் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
நடவடிக்கை தொடரும்
வால்பாறை நகராட்சியில் மொத்தம் 100 கடைகள் வாடகை செலுத்தவில்லை. எனவே அதில் 40 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள கடைகளுக்கு புதன்கிழமை சீல் வைக்கப்படும். வாடகை செலுத்த சிலர் காலஅவகாசம் கேட்டனர்.
ஏற்கனவே காலஅவகாசம் அதிகமாக வழங்கப்பட்டு விட்டது. எனவே வாடகை செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும். இல்லை என்றால் உடனடியாக சீல் வைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.