மேல்மலையனூர் அருகே 83 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு

மேல்மலையனூர் அருகே 83 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு;

Update:2022-03-29 21:56 IST
திண்டிவனம்

ஆக்கிரமிப்பு வீடுகள்

மேல்மலையனூர் அருகே செவலபுரை கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அருகில் உள்ள குளத்தை சுற்றி ஆக்கிரமித்து கட்டப்பட்பட்ட 83 வீடுகளை அப்புறப்படுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. 
இதையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்காக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிலம்புச் செல்வன், சம்பந்தம், தாசில்தார் கோவர்த்தனன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் நேற்று காலை செவலபுரை கிராமத்துக்கு வந்தனர். 

அதிகாரிகள் முற்றுகை

அப்போது அங்கிருந்த கிராமமக்கள் வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு திடீரென அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது போராட்டத் தில் ஈடுபட்ட ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து அங்கிருந்த கிராமமக்கள் மீது மண்எண்ணெயை தெளித்து எங்களை தீ வைத்து கொளுத்தி விடுங்கள் என்று கத்தினார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபரை பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

பேச்சுவார்த்தை

பின்னர் இது குறித்த தகவல் அறிந்து வந்த திண்டிவனம் உதவி ஆட்சியர் அமீத் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் அடுத்த மாதம் 6 மற்றும் 9-ந் தேதிகளில் கண்டிப்பாக ஆக்கிரமிப்பு அகற்றப்படும். தகுதியான நபர்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதை அடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் செவலபுரி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்