போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்க ஆசிரியர்களுக்கு பயிற்சி
போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அத்துடன் பள்ளிகளில் விழிப்புணர்வுஏற்படுத்தப்படுகிறது.;
பொள்ளாச்சி
போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அத்துடன் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
ஆசிரியர்களுக்கு பயிற்சி
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க மாணவர்களுக்கான திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த திட்டம் குறித்து போசோ என்கிற பயிற்சி அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மனித வள மேம்பாட்டுதுறை பரிந்துரை செய்தது. இதை தொடர்ந்து பொள்ளாச்சி தெற்கு வட்டார வள மையத்தில் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்கு பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரி ராஜசேகரன் தலைமை தாங்கி, பயிற்சியை தொடங்கி வைத்தார். கருத்தாளர்களாக ஆசிரியர் சண்முகம், மகாலட்சுமி, ஆசிரியர் பயிற்றுனர் ஹேமலதா, வெங்கட்ரமணன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இது குறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-
பள்ளிகளில் குழு அமைத்தல்
போதை பழக்கத்திற்கு ஆளாகும் மாணவ-மாணவிகளை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்காக பள்ளிகளில் குழு அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வட்டார அளவில் பயிற்சி பெற்ற தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் மாணவ-மாணவிகளுக்கு வட்டார அளவில் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். வளரினம் பருவத்தினருக்கு நல்வழி காட்டுவோம் என்கிற தலைப்பில் போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி கையெடு வழங்கப்பட்டு உள்ளது.
அதில் வளரினம் பருவத்தினரை புரிந்து கொள்ளுதல், எப்படி போதை பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள் என்று விளக்கப்பட்டு உள்ளது.
மேலும் போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தாக்கம் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மாணவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்விற்கான வாழ்க்கை திறனை மேம்படுத்துதல் ஆகியவை குறிப்பிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.