கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், ஊரப்பாக்கத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 9 பேர் கைது

கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், ஊரப்பாக்கத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-03-30 14:25 IST
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, ஒட்டேரி, மறைமலைநகர் ஆகிய போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவிக்கு புகார் வந்தது. இதனையடுத்து போதை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் முத்தமிழ் நகர் 5-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 152 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து அய்யனார் (வயது 49) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல பெருமாட்டுநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள பொட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த முனுசாமி (42), என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த கடையில் இருந்து 37 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெருமாட்டுநல்லூர் லட்சுமி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது வீட்டில் இருந்து 51 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சுதாகர் (34) என்பவர் கைது செய்யப்பட்டார். நந்திவரம் காந்தி நகர் 3-வது தெருவில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த ராமர் (60), என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதேபோல் ஊரப்பாக்கம் மதுரை மீனாட்சிபுரம் பகுதியில் ஒரு வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தபோது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 238 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அங்கிருந்த இளங்கோவன் (57) என்பவரை கைது செய்தனர்.

கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் அருகே மளிகை கடையில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த ஷாஜகான் (29), என்பவரை கைது செய்து கடையில் இருந்த 52 புகையிலை பாக்கெட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். வண்டலூர் அடுத்த கொளப்பாக்கம் வர பிரசாத் நகரிலுள்ள ஒரு மளிகைக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த ஆறுமுகபாண்டி (34), என்பவரை போலீசார் கைது செய்து கடையிலிருந்து 11 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். மறைமலைநகர் ரெயில் நிலையம் அருகே பேரமனூர் ரயில்வே கேட் அருகில் உள்ள டீக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துகொண்டிருந்த கண்ணன் (40), என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல சிங்கப்பெருமாள் கோவில் சத்யா நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த முருகன் (37), என்பரும் கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்