வலிப்பு நோயால் பள்ளி மாணவி சாவு

கொடைக்கானல் அருகே வலிப்பு நோயால் பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லாததால், உயிரிழந்ததாக கூறி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-30 16:26 GMT
கொடைக்கானல்:

பள்ளி மாணவி சாவு

கொடைக்கானல் தாலுகா பூலத்தூர் ஜே.பி. நகரை சேர்ந்தவர் கவிதா. அவருடைய மகள் பவஜா (வயது 13). இவர், அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பவஜா, பள்ளி முடிந்து வழக்கம்போல வீடு திரும்பினார். வீட்டில் இருந்த அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர்  பவஜாவை மீட்டு, சிகிச்சைக்காக பூலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள், நர்சுகள் இல்லை என்று கூறப்படுகிறது.
எனவே மாணவியை வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பவஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

மறியல்-முற்றுகை

பூலத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர், நர்சு இல்லாததாலேயே பவஜா உயிரிழந்து விட்டார் என்றும், அங்கு அவருக்கு சிகிச்சை அளித்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார் என்றும் மலைக்கிராம மக்கள் கருதினர். 

இதனால் ஆத்திரம் அடைந்த மலைக்கிராம மக்கள் அங்கு திரண்டு, ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், பூலத்தூர் சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர், நர்சு இல்லாததை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் வட்டார தலைமை மருத்துவர் சந்தோஷ் சம்பவ இடத்துக்கு விரைந்தார். பின்னர் அவர், மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பூலத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்கள், நர்சுகள் பணி புரிவதற்கு அறிவுரை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். முற்றுகை, மறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மலைக்கிராம மக்கள் கோரிக்கை

ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, அங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் வேறு இடங்களில் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பணிக்கு சென்று விட்டதாகவும், இனி வருங்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாது என்று தலைமை மருத்துவர் தெரிவித்தார்.

இதனிடையே பூலத்தூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள், நர்சுகள் பணி புரிய வேண்டும். 108 ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்