தினத்தந்தி செய்தி எதிரொலி கோவை பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் இரும்பு தடுப்புகள் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கோவை-பொள்ளாச்சி 4 வழிச் சாலையில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.;

Update:2022-03-30 23:01 IST
கிணத்துக்கடவு

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கோவை-பொள்ளாச்சி 4 வழிச் சாலையில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

4 வழிச்சாலை

கோவை ஈச்சனாரி முதல் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வழித்தடத்தில் கிணத்துக்கடவு, ஒத்தக்கால் மண்டபம் ஆகிய 2 இடங்களில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

 இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. 
இந்த வழித்தடத்தில் இருபுறத்திலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. எனவே இந்த கிராமங்களுக்கு செல்ல சாலையை கடந்து செல்லும் வகையில் 2½ கி.மீ. தூரத்துக்கு ஒரு இடைவெளி விடப்பட்டு உள்ளது. 

அடிக்கடி விபத்துகள்

இந்த 4 வழிச்சாலையில் வாகனங்கள் வேகமாக வரும்போது, ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு சாலையை கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.

மேலும் இந்த சாலையில் கிணத்துக்கடவு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோவில்பாளையம் சேரன்நகர் முதல் ஏலூர் பிரிவு வரை கடந்த ஜனவரி முதல் இதுவரை நடந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த சாலையில் வாகனங்கள் அதிவேகமாக வருவதால்தான் விபத்து நடப்பது தெரியவந்து உள்ளது. 

இரும்பு தடுப்புகள்

எனவே விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 28-ந் தேதி ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக போலீசார் நடவடிக்கை எடுத்து முதற்கட்டமாக சாலையில் இரும்பினால் ஆன தடுப்புகளை வைத்து உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, கிணத்துக்கடவு பகுதியில் 4 வழிச்சாலையில் விபத்துகள் நடப்பதை தடுக்க ஏழூர் பிரிவு, கோவில்பாளையம் சேரன்நகர், கோதவாடிபிரிவு அருகே உள்ள தனியார்பள்ளி ஆகிய 3 இடங்களில் முதல் கட்டமாக இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது. 

தொடர்ந்து போலீசார் அவ்வப்போது வாகன தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.  

கவனமாக செல்ல வேண்டும்

இது குறித்து போலீசார் கூறும்போது, கிணத்துக்கடவு பகுதியில் விபத்துகள் நடப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே 4 வழிச்சாலையை கடக்கும்போது வாகனங்கள் வருகிறதா என்பதை கண்காணித்து மிககவனமாக செல்ல வேண்டும். மேலும் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்