ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலைக்கு மாலை அணிவிப்பு
பிறந்த நாளையொட்டி ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலைக்கு கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்தனர்.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தை சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி. இவர் சிப்பாய் கலகம் நடைபெறுவதற்கு 70 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தில், குறிப்பாக ராமநாதபுரம் சீமையில் ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக போராடி சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்டவர். இவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இவரது 262-வது பிறந்தநாளையொட்டி கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் மன்னர் குமரன் சேதுபதி, ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், மாவட்ட ஊராட்சி தலைவர் திசைவீரன், துணைத்தலைவர் வேலுச்சாமி, மாவட்ட கவுன்சிலர்கள் ரவிசந்திர ராமவன்னி, கவிதா கதிரேசன், பட்டணம்காத்தான் ஊராட்சி தலைவர் சித்ராமருது, ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் வாரிசுகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.