3 மாதங்களுக்கு பிறகு வடநெம்மேலி பாம்பு பண்ணை திறப்பு
3 மாதங்களுக்கு பிறகு வடநெம்மேலி பாம்பு பண்ணை திறக்கப்பட்டது. பாம்புகளில் விஷம் எடுப்பதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.;
பாம்பு பண்ணை
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள குன்னப்பட்டு, ஆண்டிகுப்பம், மானாமதி, பட்டிபுலம், திருப்போரூர், பூஞ்சேரி மற்றும் பெருங்களத்தூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பழங்குடி இருளர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பூர்வீகமாக வேட்டையாடுவது, பாம்பு பிடிப்பது, மீன் பிடிப்பது போன்ற தொழில் செய்து வருகின்றனர்.
வீடுகளில் புகுந்து பயமுறுத்தும் விஷ பாம்புகளை அதிகம் பிடித்து காட்டில் விட்டு வந்தனர். இந்த நிலையில் இருளர் பழங்குடி இன மக்களின் வாழ்வாதாரம் மேம்பட செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வடநெம்மேலி பகுதியில் தமிழக அரசின் தொழில் வணிகத்துறை சார்பில் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டு அங்கு பார்வையாளர்கள் முன்பு கொடிய விஷமுள்ள பாம்புகளிடம் இருந்து விஷம் எடுக்கும் பாம்பு பண்ணை செயல்பட்டு வருகிறது.
பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள 350 இருளர் இனத்தவர்கள் அனுமதி சான்று பெற்று ஆண்டுதோறும் பாம்பு பிடித்து கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கி வருகின்றனர். சங்கத்திற்கு கொண்டு வரப்படும் பாம்புகள் பராமரிக்கப்பட்டு அதில் இருந்து எடுக்கப்படும் விஷத்தை அரசின் உதவியுடன் மராட்டிய மாநிலம், புனேயில் உள்ள ஆராய்ச்சி மையத்திற்கு வழங்கி வருகின்றனர். பாம்புகளை பிடிக்க கூட்டுறவு சங்கத்திற்கு ஆண்டுதோறும் வனத்துறை சார்பில் அரசாணை வெளியிட்டு அனுமதி கடிதம் வழங்கப்படுவது வழக்கம்.
திறப்பு
அனுமதி வழங்கப்படாததால் கடந்த ஜனவரி மாதம் முதல் 3 மாதத்திற்கு மூடப்பட்டது. இதனால் வாழ்வாதாரம் இழந்த பாம்பு பிடிக்கும் பழங்குடி இருளர்கள் 350 பேரும கூலி வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதையடுத்து பாம்பு பிடிக்கும் இருளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் தமிழக அரசு பாம்பு பிடிக்கவும், மூடப்பட்ட பாம்பு பண்ணையை திறக்கவும் அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது.
இதையடுத்து நேற்று வடநெம்மேலி பாம்பு பண்ணை திறக்கப்பட்டது. பாம்பு பண்ணை திறக்கப்பட்டதும் சுற்றுலா பயணிகள் நேற்று முதல் அங்கு வர தொடங்கி உள்ளனர். நேற்று பாம்பு பண்ணை திறக்கப்பட்ட முதல் நாள் என்பதால் 7 நல்லபாம்பு, 11 கட்டுவிரியன், 8 கண்ணாடி விரியன், 3 சுருட்டை விரியன் என 29 விஷ பாம்புகள் பிடித்து வரப்பட்டு பானைகளில் அடைக்கப்பட்டு பார்வையாளர்கள் முன்னிலையில் காட்சி படுத்தப்பட்டு விஷம் எடுக்கப்பட்டது.
அந்த காட்சியை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள் பாம்புகள் கடித்தால் உடலில் விஷம் ஏறாத வகையில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் முன் எப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை விஷம் எடுக்கும் இருளர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.
தற்போது தான் பாம்பு பிடிக்கும் இருளர்கள் பலர் 3 மாதங்களுக்கு பிறகு வயல்வெளிகளை நோக்கி பாம்பு பிடிக்க சென்றுள்ளதாகவும், அதனால் இன்னும் சில தினங்களில் பிடித்து வரப்படும் பாம்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பாம்பு பண்ணையில் பணியாற்றும் பழங்குடி இருளர்கள் தெரிவித்தனர்.