பொள்ளாச்சி அருகே நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி
பொள்ளாச்சி அருகே நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூரை சேர்ந்தவர் சிவக்குமார். விவசாயி. இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு மகன் ஹரிகர சுதன், மகள் சுகன்யா ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் தங்கள் வீட்டில் பொமேரியன் வகையை சேர்ந்த நாயை வளர்த்து வருகிறார்கள். அதற்கு டாபு என்று பெயர் வைத்து உள்ளனர். 7 வயதான அந்த பெண் நாய் தற்போது கர்ப்பமாக உள்ளது.
இதையடுத்து அதற்கு வளைகாப்பு நடத்த சிவக்குமார் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அத்துடன் இந்த வளைகாப்புக்கு அருகில் உள்ள நபர்கள் மற்றும் உறவினர்களை அழைத்தனர்.
வளைகாப்பு அந்த நாயை குளிப்பாட்டி புத்தாடை மற்றும் மாலை அணிவித்து அமர வைத்தனர். பின்னர் புளி சாதம், பருப்பு சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம் உள்ளிட்ட 7 வகையான சாப்பாடு, 5 வகையான இனிப்புகள் மற்றும் நாய்க்கு பிடித்த பிஸ்கட், பழங்கள் வாங்கி வைத்து வளைகாப்பு நடத்தப்பட்டது.
அத்துடன் அந்த நாய்க்கு சாப்பாடும் ஊட்டப்பட்டது. மேலும் விழாவிற்கு வந்தவர்கள் நாய்க்கு பொட்டு வைத்து, கையில் வளையல் போட்டு விட்டனர்.
இது குறித்து மகாலட்சுமி கூறும்போது, நாங்கள் டாபுவை குழந்தைபோல வளர்த்து வருகிறோம். அது நீண்ட ஆயுளுடன் எப்போதும் எங்களுடன் இருக்க இறைவனை வேண்டி வருகிறோம் என்றார்.