தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-;
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
சாலையில் செல்லும் கழிவுநீர்
கோவை பொள்ளாச்சி இடையே 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கிணத்துக்கடவு கல்லாங்காட்டு புதூர் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் அகற்றப்பட்டது. இந்த பகுதியில் தற்போது மழை நீர் வடிகால் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் நான்குவழிச்சாலை சர்வீஸ் சாலையில் வழிந்து செல்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.
முருகேசன், கல்லாங்காட்டுபுதூர்.
பழுதான சாலை
கோவை-சத்தி ரோடு கணபதி அத்திப்பாளையம் பிரிவில் இருந்து சின்னவேடம்பட்டி செல்லும் சாலை, பழுதானதால் பல இடங்களில் குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு காட்சியளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயங்களுடன் உயிர் தப்பித்துச்செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
அர்ச்சுனன், கணபதி.
தெருநாய்கள் தொல்லை
பொள்ளாச்சி வெங்கடேச காலனி, நகராட்சி அலுவலகம் அருகே மற்றும் உழவர் சந்தை செல்லும் ரோட்டில் தெருநாய்கள் தொல்லை மிக அதிகமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் அச்சம் அடைந்து வருகிறார்கள். மேலும் நடந்து செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் தப்பி ஓடும்போது சிலர் கீழே தவறி விழும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் பெருக்கத்தை குறைக்க நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும்.
சரிதா, பொள்ளாச்சி.
தண்ணீர் பந்தல்
கோவை மாநகர பகுதியில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் வெளியே சென்று வரும் பொதுமக்கள் பெரிதும் ்அவதியடைந்து வருகிறார்கள். எனவே மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்தால் நன்றாக இருக்கும். அதை அதிகாரிகள் செய்ய முன்வர வேண்டும்.
முருகேசன், கவுண்டம்பாளையம்.
டாஸ்மாக் வேண்டாம்
மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே ரேஷன் கடை உள்ளது. இந்த கடை அருகே டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்து உள்ளனர். இங்கு டாஸ்மாக் அமைத்தால் அருகே பள்ளி உள்ளதால் மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து இங்கு டாஸ்மாக் அமைப்பதை தடுக்க வேண்டும்.
பாஷா, மேட்டுப்பாளையம்.
பஸ் இயக்க வேண்டும்
கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளமடை அரசு மேல்நிலைப்பள்ளியில் தொட்டிபாளையம், அக்ரகார சாமர்க்குளம் உள்பட ஏராளமான பகுதியை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த வழியாக 57-87ஏ என்ற தடம் கொண்ட அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. தற்போது இந்த பஸ் நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே மாணவர்களின் நலன் கருதி இ்ந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.
செந்தில்குமார், எஸ்.எஸ்.குளம்.
வீணாகும் குடிநீர்
அன்னூர் பேரூராட்சியில் சந்தைக்கடையில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி தண்ணீர் நிரம்பி வீணாக சென்று வருகிறது. ஏற்கனவே தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் இங்கு குடிநீர் சாலையில் வீணாக செல்வதால் மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகுமார், அன்னூர்.
பகலில் ஒளிரும் விளக்குகள்
கோவை பீளமேட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலக சாலையில் இருந்து திருமகள்நகர் வரை செல்லும் வழியில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த விளக்குகள் கடந்த சில நாட்களாக 24 மணி நேரமும் ஒளிருகிறது. இதனால் மின்சார செலவு அதிகரிக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து இந்த மின்விளக்குகள் இரவு நேரத்தில் மட்டும் ஒளிர வழிவகை செய்ய வேண்டும்.
சுப்பிரமணியம், பீளமேடு.
குடிநீர் தட்டுப்பாடு
கோவை மாநகராட்சி 1-வது வார்டு விஸ்வநாத கவுண்டர் நகர் பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும் மிகக்குறைந்த அளவே தண்ணீர் கிடைக்கிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பகுதிக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
ஜோதிராம், துடியலூர்.