கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய கட்டிட பணி தொடங்காததால் நிதி திரும்பியது

கிணத்துக்கடவில் தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டிட பணி தொடங்காததால் நிதி திரும்பி சென்றது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.;

Update:2022-03-31 23:32 IST
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டிட பணி தொடங்காததால் நிதி திரும்பி சென்றது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். 

தீயணைப்பு நிலையம் 

கிணத்துக்கடவு தாலுகா கடந்த 2012-ம்  ஆண்டு செயல்பட தொடங்கியது. இங்கு தென்னை நார் தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதால் தீ விபத்து ஏற்படும்போது பொள்ளாச்சி அல்லது கோவையில் இருந்துதான் தீயணைப்பு வாகனம் வர வேண்டிய நிலை இருந்தது. 

எனவே பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 2018-ம் ஆண்டில் கிணத்துக்கடவில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கோவை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் தீயணைப்பு நிலையம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. 

பணம் திரும்பியது

இந்த தீயணைப்பு நிலையத்துக்கு கட்டிடம் கட்ட நல்லட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 96 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அத்துடன் அங்கு தீயணைப்பு நிலைய கட்டிடம் கட்ட ரூ.1 கோடியே 49 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

ஆனால் அங்கு தீயணைப்பு நிலையம் கட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து ஒதுக்கப்பட்ட பணம் அரசுக்கு திரும்பி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். 

இது குறித்து தீயணைப்புத்துறையினர் கூறியதாவது:- 

வாடகை கட்டிடம்

தீயணைப்பு நிலையம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் தொடங்காமல் இருந்ததால் தற்போது அந்த பணம் மீண்டும் அரசுக்கே திரும்பி சென்றுவிட்டது. இதனால் தற்போது அரசு தேர்வு செய்த இடத்தில் தீயணைப்பு நிலையம் புதிதாக கட்டப்படுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. 

நிலம், பணம் இருந்தும் கட்டிட பணிகள் தொடங்காததே இதற்கு காரணம் ஆகும். இதனால் தொடர்ந்து தீயணைப்பு நிலையம் வாடகை கட்டிடத்தில் செயல்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. 

எனவே மீண்டும் அரசு ஆய்வு செய்து நிதி ஒதுக்கினால் மட்டுமே தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட அனுமதி கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்