வால்பாறை நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஆணையாளரிடம் 11 கவுன்சிலர்கள் கடிதம் கொடுத்தனர்

தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி வால்பாறை நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று ஆணையாளரிடம் 11 கவுன்சிலர்கள் கடிதம் கொடுத்தனர்.;

Update:2022-03-31 23:32 IST
வால்பாறை

தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி வால்பாறை நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று ஆணையாளரிடம் 11 கவுன்சிலர்கள் கடிதம் கொடுத்தனர். 

நகர்மன்ற கூட்டம்

வால்பாறை நகர்மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செந்தில்குமார், ஆணையாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் தீர்மான பொருள் வாசிக்கப்பட்டது.  அப்போது குறுக்கிட்டு பேசிய துணைத்தலைவர் செந்தில்குமார் வால்பாறை பகுதியில் குடிதண்ணீர் பிரச்சினை உள்பட பல்வேறு மக்கள் பிரச்சினைகள் இருக்கும்போது துணைத் தலைவர் என்ற முறையில் என்னிடமும், மற்ற கவுன்சிலர்களிடமும் மன்ற கூட்டம் சம்மந்தமாக ஆலோசிக்காமல் தீர்மான பொருள் தயாரிக்கப்பட்டு உள்ளது என்றார். 

கவுன்சிலர்கள் கூச்சல்

இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தலைவர் தான் கூட்டத்தில் பேச வேண்டும், துணைத் தலைவர் பேசக்கூடாது என்று கூச்சலிட்டதுடன் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் 10 பேரும் அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 11 கவுன்சிலர்களும் தீர்மான பொருள் வாசிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். 

அ.தி.மு.க. கவுன்சிலர் மணிகண்டன், நகராட்சியின் நிதி நிலை எவ்வாறு உள்ளது, மக்களின் எந்தெந்த தேவைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது குறித்து எந்த ஆலோசனைகளும் நடத்தப்படவில்லை. 


எது கேட்டாலும் பேச ஆணையாளர் வாய்ப்பு கொடுப்பது இல்லை. எனவே உரிய ஆலோசனைக்கு பிறகு தீர்மான பொருள் தயாரிக்க வேண்டும் என்றார். 

11 பேர் வெளிநடப்பு

21-வது வார்டு கவுன்சிலர் உமாமகேஷ்வரி:- பல்வேறு குழு உறுப்பினர் தேர்தலுக்கு வந்த நிலையில் அவசரகதியில் நகர்மன்ற கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவிக்கிறேன். 

புதிதாக பொறுப்பேற்று உள்ள கவுன்சிலர்களுக்கு நகர்மன்ற கூட்ட நடவடிக்கைகள் குறித்து எந்த பயிற்சி கொடுக்கவில்லை.
 கவுன்சிலர்களை கலந்து ஆலோசிக்காமல் தீர்மானம் கொண்டு வருவது சரியா? என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது 1-வது வார்டு கவுன்சிலர் செல்வகுமார், உமா மகேஷ்வரியை பேசவிடாமல் குறுக்கிட்டு தடுத்தார். அதற்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உமாமகேஷ்வரியை பேச அனுமதிக்குமாறு கேட்டனர். 

அதற்கு ஆணையாளர் சுேரஷ்குமார், தற்போது கூட்டம் நடத்தவில்லை என்றால் அரசிடம் இருந்து நிதிபெற முடியாது என்றார். இதை ஏற்றுக்கொள்ள மறுத்த 10 தி.மு.க. கவுன்சிலர்கள், ஒரு அ.தி.மு.க. கவுன்சிலர் ஆகியோர் தலைவர் மற்றும் ஆணையாளரை கண்டித்து துணைத்தலைவர் செந்தில்குமார் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். 

தொடர்ந்து மீதமுள்ள 10 கவுன்சிலர்களுடன் கூட்டம் நடந்தது. பின்னர் பல்வேறு எஸ்டேட் பகுதியில் உள்ள சாலை சீரமைப்பு நகராட்சி வாடகை மறுநிர்ணயம் செய்தல், உரிமம் புதுப்பித்தல், உரிமம் நீட்டிப்பு செய்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

நம்பிக்கையில்லா தீர்மானம்

பின்னர் நகராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார் தலைமையில் 11 கவுன்சிலர்கள் ஆணையாளர் சுரேஷ்குமாரை சந்தித்தனர். பின்னர் அவர்கள் நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கடிதம் கொடுத்தனர். 

அதற்கு ஆணையாளர், ஒருவடத்திற்கு தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரமுடியாது என்று கூறியதுடன், உங்களது கடிதத்திற்கு பதில் தருகிறேன் என்றார்.  இது குறித்து துணைத்தலைவர் செந்தில்குமார் கூறும்போது, நகராட்சி தலைவர் மற்றும் ஆணையாளர் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். 

கவுன்சிலர்களிடம் எதுவும் ஆலோசிப்பது இல்லை. எனவே நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக்கோரி கடிதம் கொடுத்து உள்ளோம். எனவே உடனே நகர்மன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும. அத்துடன் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமாரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்