பொள்ளாச்சியில் அதிக மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோக்கள் பறிமுதல்
விதிமுறையை மீறி அதிகமாக மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உதவியாளர் இல்லாத பள்ளி வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;
பொள்ளாச்சி
விதிமுறையை மீறி அதிகமாக மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உதவியாளர் இல்லாத பள்ளி வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சிறப்பு ஆய்வு
சென்னையில் தனியார் பள்ளியில் படித்த 2-ம் வகுப்பு மாணவன் பள்ளி வாகனம் மோதி பரிதாபமாக இறந்தான். இதை தொடர்ந்து பள்ளி வாகனங்களில் சிறப்பு ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது.
அதன்படி பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஜெயந்தி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பல்லடம் ரோடு, கோவை ரோடு, உடுமலை ரோடு, மீன்கரை ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்தனர். சில வாகனங்களில் உதவியாளர் இல்லாமலும், டிரைவர் சீருடை அணியாமலும் இருந்தது தெரியவந்தது. இதேபோன்று தகுதி சான்று இல்லாமல், போக்குவரத்து விதிமுறையை மீறி அதிகமாக மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் கூறியதாவது:-
குழந்தைகளின் பாதுகாப்பு
பொள்ளாச்சியில் நடந்த சிறப்பு தணிக்கையில் விதிமுறையை மீறிய 6 பள்ளி வாகனங்களுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் தகுதி சான்று, ஓட்டுனர் உரிமம் இல்லாதது, அதிகமாக குழந்தைகளை ஏற்றி சென்ற 11 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுபோன்று தொடர்ந்து பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக் கடவு பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு, விதிமுறையை மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் விதிமுறைகளை மீறி ஆட்டோக்களை இயக்கிய டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.