தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-;
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
நடக்க முடியாத நடைபாதை
கூடலூர் மைக்காமவுண்ட் மங்களம் வயல் பகுதிக்கு செல்லும் நடைபாதை கடந்த ஆண்டு பெய்த மழையில் உடைந்து விழுந்தது. தற்போது வரை சீரமைக்கப்படவில்லை. இது தொடர்பாக பலமுறை கோரிக்கை மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்த நடைபாதையில் நடக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இந்த நடக்க முடியாத நடைபாதையை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
கமலா, கூடலூர்.
சாலைகள் பராமரிக்கப்படுமா?
கோத்தகிரி பகுதியில் கடந்த சில மாதங்களாக பெய்த மழை காரணமாக நகரின் பல பகுதிகளில் உள்ள நேர்த்தியாக போடப்பட்ட சாலைகளின் சில இடங்கள் பழுதடைந்து குண்டும், குழியுமாகக் காணப்படுகின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பழுதான இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுமேஷ், கோத்தகிரி.
புதருக்குள் புதைந்த அறிவிப்பு பலகை
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் நெகமம் பேரூராட்சி உள்ளது. இந்த பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு அறிவிப்பு பலகை பொள்ளாச்சி திருப்பூர் மெயின் ரோட்டில் கருமாபுரம் பிரிவு அருகே வைக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு பலகை தற்போது புதருக்குள் புதைந்துவிட்டது. இதனால் அறிவிப்பு பலகை வைத்தும் வீணாக இருக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அறிவிப்பு பலகையை சுற்றி உள்ள புதர்களை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்.
நாகராஜன், சின்னேரிபாளையம்.
அடிக்கடி உடையும் குடிநீர் குழாய்
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிப்புத்தூர் ஊராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், ஊராட்சி பகுதியில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு மற்றும் பழுது ஏற்படுகிறது. இதனால், ஊராட்சி நிர்வாகம் உரிய நேரத்தில் பொது மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.
குமரேசன், சுல்தான்பேட்டை.
தெருவிளக்குகள் இல்லை
கோவை அருகே உள்ள கண்ணம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது ஆர்.கே.நகர். இங்குள்ள சின்னக்குயிலி பிரிவில் இருந்து இந்த பகுதிக்கு 300 மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். ஆனால் செல்லும் வழியில் தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து இருப்பதால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இரவில் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து வரும் பெண்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்ைக எடுத்து இங்கு தெருவிளக்குகள் அமைத்து கொடுக்க வேண்டும்.
செல்வி, ஆர்.கே.நகர்.
மினிபஸ் வேண்டும்
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே உள்ள எலச்சிபாளையத்துக்கு மினி பஸ்கள் வந்து சென்றன. தற்போது அந்த பஸ்கள் வருவது இல்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் கருமத்தம்பட்டியோ அல்லது சோமனூர் வந்து செல்ல வேண்டும். பஸ் வசதி இல்லாததால் நடந்தோ அல்லது ஆட்டோவில் வரக்கூடிய நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிறுத்தப்பட்ட மினிபஸ்சை மீண்டும் இயக்க வழிவகை செய்ய வேண்டும்.
சந்ோஷ்குமார், எலச்சிபாளையம்.
நிழற்குடை இல்லை
மேட்டுப்பாளையம் சிறுமுகை தியேட்டர் மேடு என்ற பஸ்நிறுத்தத்தில் இதுவரை நிழற்குடை வசதி செய்து கொடுக்கவில்லை. இதனால் இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நிழல் தேடி அருகே உள்ள கடைகளில் தஞ்சம்புகும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு உடனடியாக நிழற்குடை வசதி செய்து கொடுக்க வேண்டும்.
விமலா நாகராஜன், சிறுமுகை.
குடிநீர் தட்டுப்பாடு
கோவை கணபதியை அடுத்த மணியக்காரன்பாளையத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு குடிநீர் வினியோகம் செய்து 10 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதனால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. வசதி படைத்தவர்கள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கிவிடுகிறார்கள். ஆனால் ஏழை எளிய மக்கள் தண்ணீரை தேடி தோட்டங்களுக்கு அலையும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்ைக எடுத்து இங்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
பழனிசாமி, மணியக்காரன்பாளையம்.
காவலாளி வேண்டும்
கோவை கவுண்ட்பாளையத்தில் இருந்து இடையர்பாளையம் செல்லும் சாலையில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு இரவு நேர காவலாளி இல்லாததால் இரவில் பலர் உள்ளே புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சில நேரத்தில் அவர்கள் மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து செல்வதால், மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பள்ளிக்கு காவலாளியை நியமிக்க வேண்டும்.
முருகேசன், செந்தமிழ்நகர்.