‘ பெண் வக்கீல் தற்கொலை வழக்கில் 4 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்கள்’-போலீசாருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பெண் வக்கீல் தற்கொலை வழக்கில் 4 மாதத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுங்கள் என்று போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.;

Update:2022-04-07 02:32 IST
மதுரை, 

பெண் வக்கீல் தற்கொலை வழக்கில் 4 மாதத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுங்கள் என்று போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பெண் வக்கீல் தற்கொலை

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த வக்கீல் செந்தில்நாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
என்னுடைய தங்கை சீதாலட்சுமி. வக்கீலாக தொழில் செய்து வந்தார். அவருக்கும், சஞ்சை பிரியன் என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சில மாதங்கள் கழித்து என் தங்கையின் குடும்பத்தினர் தொழில் செய்வதற்காக ரூ.3 லட்சத்தை வரதட்சணையாக கேட்டுள்ளனர். இதுகுறித்து அவர் எங்களிடம் தெரிவித்தார். அதன்பேரில் அந்த தொகையை ஏற்பாடு செய்து தர தாமதமானது.
இதற்கிடையே என் தங்ைகயை, அவர் கணவர் குடும்பத்தினர் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாக்கியுள்ளனர். பின்னர் அவர் எங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் விரக்தி அடைந்த அவர், கடந்த 2016-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்தனர். முதலில் சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்யப்பட்டது. பின்னர் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் அந்த வழக்கு மாற்றியமைக்கப்பட்டது.

4 மாதங்களுக்குள்...

அதன்பின் என் தங்கை தற்கொலை வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்யவில்லை. எனவே என் தங்கை சீதாலட்சுமி தற்கொலை வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். முடிவில், ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தாமதிப்பதை ஏற்க இயலாது. 
எனவே மனுதாரர் தங்கை தற்கொலை வழக்கை விசாரித்து 4 மாதத்தில் குற்றப்பத்திரிகையை திருமங்கலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்ய வேண்டும். போலீசாரின் விசாரணைக்கு மனுதாரர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்