கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள 2 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள 2 பேரை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.;
கோவை
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள 2 பேரை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
கோவை குண்டு வெடிப்பு சம்பவம்
கோவை மாநகரில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி 11 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. நாட்டையே உலுக்கிய இந்த பயங்கர சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்ததோடு, 250 பேர் படுகாயம் அடைந்தனர்.
இக்கொடூர சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் அல் உம்மா அமைப்பின் தலைவர் பாஷா, முகமது அன்சாரி, மதானி உள்பட 166 பேரை கைது செய்தனர்.
இவர்கள் மீதான வழக்கு தனிக்கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு, 2007-ம் ஆணடு தீர்ப்பு கூறப்பட்டது. இதில் 16 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 3 பேர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டனர். மற்ற அனைவரும் வெளியில் உள்ளனர்.
24 ஆண்டுகளாக தலைமறைவு
இந்த நிலையில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முஜிபுர் ரகுமான் என்கிற முஜி (வயது 55) மற்றும் சாதிக் என்ற ராஜா (45) ஆகிய 2 பேர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். இதில் ராஜா என்பவர் டெய்லர் ராஜா, வளர்ந்த ராஜா என்று அழைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
முஜி, ராஜா ஆகிய இவர்கள் மீதும் மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கொலை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட உள்ளது. ஆனாலும் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய கோவை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த சைலேந்திரபாபு அமைத்த சிறப்பு தனிப்படை போலீசார் கேரள மாநிலம் கொச்சியில் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாக அறிந்து அங்கு சென்றனர்.
இதில் முஜிபுர் ரகுமான், சாதிக் ஆகியோர் அங்கு இருப்பதை உறுதி செய்ததாக கூறப்படுகிறது. உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட தனிப்படை போலீசார், 2 பேரும் சுற்றி வளைக்க முயன்றனர். அதற்குள் கோவை போலீசார் தங்களை கண்காணிப்பதை அறிந்த அவர்கள் அங்கிருந்து ரகசியமாக தப்பி சென்று விட்டனர்.
அதன்பிறகு அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்பது குறித்து தெரியவில்லை. தொடர்ந்து அவர்கள் 24 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
3 தனிப்படை அமைப்பு
கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட புகைப்படங்களை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
தற்போது அவர்களை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் கோவை, திருச்சி, மதுரை என 3 மாவட்டங்களிலும் புலனாய்வில் நன்கு தேர்ந்த போலீசார் கொண்ட தலா ஒரு சிறப்பு படை என மொத்தம் 3 தனிப்படைகளை அமைக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகாவில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் இந்த மாநிலங்களில் துண்டு பிரசுரங்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்களை ஓட்டியும் தீவிர தேடுதல் வேட்டை நடத்த முடிவு செய்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ரூ.2 லட்சம் சன்மானம்
இவர்கள் 2 பேர் குறித்து தகவல் அளித்தால் தலா ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் ஏற்கனவே அறிவித்து உள்ளனர். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதால் இந்த வழக்கு தற்போது சூடுபிடித்து உள்ளது.