காஞ்சீபுரம் அருகே கொத்தனாரை கொன்று குட்டையில் உடல் வீச்சு - 2 பேர் கைது

காஞ்சீபுரம் அருகே கொத்தனாரை கொன்று குட்டையில் உடல் வீசியது தொடர்பான வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-04-09 22:49 IST
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தை அடுத்த விஷ்ணுநகரில் உள்ள குட்டையில் வாலிபரின் உடல் கை , கால்கள் கட்டப்பட்ட நிலையில் மிதப்பதாக காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர் யார் என்றும், கை , கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டரா? என்பது குறித்து உரிய விசாரணை செய்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவிட்டார்.

காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் மேற்பார்வையில், காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டதில், குட்டையில் உயிரிழந்து கிடந்த வாலிபர் காஞ்சீபுரம் அருகே ஓரிக்கை அப்பாவு நகரை சேர்ந்த கொத்தனார் வேலை செய்யும் சரவணன் (வயது 34) என்பது தெரியவந்தது.

இது சம்பந்தமாக ஓரிக்கை கண்ணகிபுரத்தை சேர்ந்த பானு (40), குமரன் (40) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில், கடந்த 5-ந்தேதி சரவணன் மதுக்கடையில் மதுகுடித்த போது, அங்கு வந்த பானு, குமரன் ஆகியோரிடம் மது வாங்கி தருமாறு மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பானு, சரவணனின் வீட்டிற்கு சென்று அவரது தந்தை வெங்கடேசனிடம் தகராறு குறித்து கூறிவிட்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சரவணன், குமரனின் வீட்டின் அருகே சென்று அவரிடம் கேட்டபோது இருவருக்கும் கை கலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு இருந்த பானு அருகில் இருந்த கட்டையால் சரவணனை தலையில் தாக்கியதில் இறந்து போன அவரது கை , கால் களை கட்டி ஓரிக்கைக்கு அடுத்துள்ள விஷ்ணுநகரில் உள்ள பட்டாசு குடோன் அருகில் உள்ள குட்டையில் வீசிவிட்டு சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது. அதையொட்டி பானு, குமரன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்