பாவூர்சத்திரத்தில் அரசு ஊழியர் வீட்டில் நகை கொள்ளை

பாவூர்சத்திரத்தில் அரசு ஊழியர் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நகைகளை திருடி சென்று உள்ளனர்.;

Update:2022-04-10 03:32 IST
பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ெரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 39). இவர் தென்காசி மாவட்ட நில அளவை அலுவலகத்தில் தலைமை வரைவாளராக பணியாற்றி வருகிறார். 

இவர் நேற்று முன்தினம் இரவில் தன்னுடைய மனைவி, குழந்தையுடன் கேரள மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றார்.  இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் ஜெயராஜின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அங்குள்ள பீரோவை உடைத்து, அதில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

நேற்று காலை ஜெயராஜின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து ஜெயராஜிக்கும், பாவூர்சத்திரம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். 

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் செல்போனில் ஜெயராஜை தொடர்பு கொண்டு பேசினர். ஜெயராஜ் குடும்பத்தினர் வீட்டுக்கு திரும்பி வந்த பின்னரே எவ்வளவு நகைகள் கொள்ளை போனது என்பது பற்றி தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்