இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த ஈரான் விசைப்படகு சிறைபிடிப்பு

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த ஈரான் நாட்டு விசைப்படகை சிறைபிடித்த கடலோர காவல் படையினர் அதில் இருந்த 11 பேரை கைது செய்தனர்.

Update: 2022-04-10 10:03 GMT
ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள்

அந்தமான் அருகில் உள்ள கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ஈரான் நாட்டைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் அதில் இருந்த 11 நபர்களை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஈரான் நாட்டை சேர்ந்த 11 பேர்களையும் அவர்கள் வந்த விசைப்படகையும் நேற்று இந்திய கடலோர காவல்படையினர் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வந்தனர்.

பின்னர் கடலோர காவல் படை சார்பாக மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசைப்படகு முழுவதும் சோதனை செய்தனர்.

போதைப்பொருள் கடத்தலா?

இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள 11 ஈரான் நாட்டினரையும் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் ஜிதேந்தர் தலைமையில் வந்த அதிகாரிகளிடம் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

அதைத்தொடர்ந்து, அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கத்தில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்த உள்ளனர். பிடிபட்டவர்கள் யார்? போதைப்பொருள் கடத்தி வந்தார்களா? எத்தனை கிலோ போதை பொருட்கள் பிடிபட்டது ? என்பது தொடர்பாக எந்த தகவலையும் மத்திய போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

மீனவர்களிடம் விசாரணை

ஈரான் நாட்டிலிருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டதா? பிடிபட்ட 11 நபர்கள் மீனவர்களா? அல்லது போதை மருந்து கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களா? என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் போலீசார், உளவுத்துறையினர் கடலோர காவல்படையினர் என ஏராளமானோர் கூடியதால் அப்பகுதியில் மீனவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்