ஆம்னி வேனில் கடத்தி வரப்பட்ட 1,350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது
ஆம்னி வேனில் கடத்தி வரப்பட்ட 1,350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது;
நாமக்கல்:
நாமக்கல் அருகே ஆம்னி வேனில் கடத்தி வரப்பட்ட 1,350 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேஷன் அரிசி பறிமுதல்
சேலம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், நாமக்கல் தனித்துணை தாசில்தார் ஆனந்தன், தனி வருவாய் ஆய்வாளர் சியாம் சுந்தர் மற்றும் போலீசார் சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாச்சல் பிரிவு ரோடு அருகே நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது அந்த வேனில் 50 கிலோ எடை கொண்ட 27 பிளாஸ்டிக் சாக்குகளில் சுமார் 1,350 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி கடத்தி வரப்படுவது தெரியவந்தது. இதையடுத்து வேனுடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
டிரைவர் கைது
மேலும் ஆம்னி வேனை ஓட்டி வந்த சேந்தமங்கலம் தாலுகா வரகூர் தாட்கோ காலனியை சேர்ந்த டிரைவர் ஜெகநாதன் (வயது 52) என்பவரை குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது? எங்கு கொண்டு செல்லப்படுகிறது ? என்பது குறித்து டிரைவர் ஜெகநாதனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்ட வேன் யாருக்கு சொந்தமானது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.