குடியிருப்புக்கு அனுமதி வாங்கி விட்டு நர்சரி பள்ளிக்கு சான்று கேட்டதால் கட்டிடத்துக்கு சீல்
குடியிருப்புக்கு அனுமதி வாங்கி விட்டு நர்சரி பள்ளி செயல்பட சான்று கேட்டதால் கட்டிடத்துக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.;
பொள்ளாச்சி
குடியிருப்புக்கு அனுமதி வாங்கி விட்டு நர்சரி பள்ளி செயல்பட சான்று கேட்டதால் கட்டிடத்துக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
குடியிருப்புக்கு அனுமதி
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்.ஐ.சி. காலனியில் சாந்தா காளிங்கராயர் என்பவர் கட்டிடம் கட்டி உள்ளார். அந்த கட்டிடத்துக்கு நகராட்சியில் குடியிருப்பு மனைக்கான அனுமதி வாங்கி உள்ளார்.
இந்த நிலையில் அந்த கட்டிடத்தில் பள்ளி நடத்த நகராட்சி சுகாதார பிரிவில் சுகாதார சான்று கேட்டு விண்ணப்பிக்கப் பட்டது. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி அந்த கட்டிடத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.
கட்டிடத்துக்கு ‘சீல்’
இதை தொடர்ந்து நகரமைப்பு அதிகாரி சாந்தி நிர்மலாபாய் தலைமையில் நகரமைப்பு அலுவலர் வரதராஜன், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், நில அளவையர் அசோக்குமார் மற்றும் அலுவலர்கள் கட்டிடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் அந்த கட்டிடத்திற்கு ‘சீல்’ வைத்தனர்.
இதை தொடர்ந்து அங்கு மகாலிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம்தாஸ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
சுகாதார சான்று
பொள்ளாச்சி எல்.ஐ.சி. காலனியில் தரைதளம், முதல் தளத்துடன் கூடிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் பள்ளி நடத்த கோவை நகரமைப்பு நிர்வாக இயக்குனரிடம் அனுமதி கேட்டு உள்ளனர். ஆனால் போதிய இடவசதி இல்லாததால் அனுமதி கொடுக்கவில்லை.
இதையடுத்து அந்த கட்டிடத்திற்கு குடியிருப்பு உபயோகத்திற்கு அனுமதி வாங்கி உள்ளனர். பின்னர் துவாரகா என்கிற பெயரில் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி நடத்த சுகாதார சான்று கேட்டு சுகாதார பிரிவில் விண்ணப்பித்து உள்ளனர்.
விதிமுறை மீறல்
விதிமுறையை மீறி பள்ளி நடத்துவதற்கு அனுமதி கேட்டதால் அந்த கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. பொதுவாக பள்ளி நடத்த கட்டிடத்தை சுற்றி நாலாபுறமும் 6 மீட்டர் விட வேண்டும். ஆனால் குறைந்த அளவே இடம் விடப்பட்டு உள்ளது.
மேலும் கட்டிடம் பள்ளி நடத்த ஏற்ற வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. அதிகாரிகள் வருவதை அறிந்ததும் அங்கு கியாஸ் அடுப்பு மற்றும் கட்டில், மெத்தை போன்ற பொருட்களை வைத்து உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.