கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி காருடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தப்பி ஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
பொள்ளாச்சி
கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி காருடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தப்பி ஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
போலீசார் ரோந்து
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை, வேட்டைக்காரன் புதூர் பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை கடத்தல்காரர்கள் கேரளாவுக்கு கடத்துவதாக பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோபிநாத் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதநேரு மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது செமனாம்பதி ரோட்டில் வேட்டைக்காரன்புதூர் சந்திப்பு அருகில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது.
ரேஷன் அரிசி பறிமுதல்
உடனே போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த காரை திறந்து சோதனை செய்தனர். அப்போது காருக்குள் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. காரில் சுமார் 50 கிலோ வீதம் 8 மூட்டைகள் இருந்தன.
இது தொடர்பாக போலீசார் நடத்திய. விசாரணையில் வேட்டைக்காரன்புதூரை சேர்ந்த திவாகர் என்பவர் கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்துவதற்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். அத்துடன் தலைமறைவான திவாகரை வலைவீசி தேடி வருகிறார்கள்.