பொள்ளாச்சி நகராட்சி அவசர கூட்டம் சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
பொள்ளாச்சி நகராட்சி அவசர கூட்டத்தில் சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகராட்சி அவசர கூட்டத்தில் சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அவசர கூட்டம்
பொள்ளாச்சி நகராட்சி அவசர கூட்டம் மன்ற கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆணையாளர் தாணுமூர்த்தி, துணை தலைவர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சொத்து வரியை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மேலும் ரூ.55 லட்சத்தில் அலுவலர்களுக்கு 4 வாகனங்கள் வாங்கவும், குப்பை கிடங்கில் தீப்பிடிப்பதை தடுக்க இடவசதியை ஏற்படுத்த தனியார் வாகனங்கள் மூலம் பணிகள் மேற்கொள்ள ரூ.10 லட்சம் உத்தேச செலவினமாக அனுமதிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
இதற்கிடையில் சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.
பின்னர் கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஜேம்ஸ் ராஜா பேசும்போது, தமிழகத்திலேயே சொத்துவரி அதிகமாக உள்ள பொள்ளாச்சி நகராட்சியில் மேலும் வரி உயர்த்தப் பட்டால் வீடு வாடகை மேலும் உயரும். எனவே வரி உயர்வு வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கவுன்சிலர் வசந்தும் பேசினார். பின்னர் அ.தி.மு.க. கவுன்சிலர்களான 2 பேரும் தலைவரிடம் ஆட்சேபனை கடித்தை கொடுத்து சொத்து வரியை குறைக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர்.
ரூ.28 கோடி கடன்
துணை தலைவர் கவுதமன் கூறுகையில், குப்பை கிடங்கில் பணிகள் மேற்கொள்ள தனியாருக்கு ரூ.10 லட்சம் வாடகை கொடுப்பதற்கு பதிலாக புதிதாக பொக்லைன் எந்திரங்களை வாங்க வேண்டும். சொத்து வரியை உயர்வால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே நகராட்சி இடங்களில் வணிக வளாகங்கள் கட்டி வருவாயை அதிகரிக்கலாம் என்றார். நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி கூறுகையில், நகராட்சிக்கு தற்போது ரூ.28 கோடி வரை கடன் உள்ளது என்றார்.
நகராட்சி தலைவர் சியாமளா பேசும்போது, சுகாதாரம், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.