தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-;
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
மூடிக்கிடக்கும் கழிப்பறைகள்
கடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே புதிதாக கழிப்பறை கட்டப்பட்டது. அந்த கழிப்பறைகள் இதுவரை திறக்கப்படாமல் மூடியே இருக்கிறது. இதன் காரணமாக இங்கு வரும் பெண்கள் உள்பட பொதுமக்கள் அவசர நேரத்தில் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாததால் இந்த கழிப்பறைகள் பாழாகி வருகிறது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து உடனடியாக இந்த கழிப்பிடங்களை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.
ஹரி, கூடலூர்.
திறந்தவெளி பாரான நிழற்குடை
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலை பி.ஏ.பி. கால்வாய் அருகே பயணிகள் நிழற்குடை உள்ளது. இங்கு, பகல் நேரத்திலேயே மதுபிரியர்கள் அமர்ந்து மது குடிக்கிறார்கள். பின்னர் அங்கேயே பாட்டிலை உடைத்துவிட்டு செல்வதால் இந்த நிழற்குடையை பயன்படுத்த பொதுமக்கள் அச்சம் அடைகிறார்கள். எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இந்த நிழற்குடைக்குள் அமர்ந்து மது குடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
சதீஸ்குமார், சுல்தான்பேட்டை.
குண்டும் குழியுமான ரோடு
கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் மேம்பால பணிகள் நடப்பதால் வாகனங்கள் சங்கனூர், நல்லாம்பாளையம், மணியகாரன்பாளையம் வழியாக மாற்றிவிடப்பட்டு உள்ளது. ஆனால் இந்த பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் பழுதாகி வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
பழனிசாமி, மணியகாரன்பாளையம்.
நிரம்பி வழியும் குப்பை
கோவை சலீவன் வீதியில் உள்ள பள்ளியின் பின்புறம் இருக்கும் சாலையில் குப்பை தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த குப்பை தொட்டி சுத்தம் செய்யப்படாததால் நிரம்பி வழிகிறது. அத்துடன் அதன் அருகே பொதுமக்கள் குப்பைகளை கொட்டி செல்வதால் அந்தப்பகுதி வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து நிரம்பி வழியும் குப்பையை சரிசெய்ய வேண்டும்.
மகாராஜன், கோவை.
ஆபத்தான மரங்கள்
கோவை ராம்நகர் ராமர் கோவில் வீதியில் சாலையின் இருபுறத்திலும் ஏராளமான மரங்கள் உள்ளன. இதில் பல மரங்கள் வலுவிழந்து எந்த நேரத்திலும் உடைந்து விழும் அபாய நிலையில்தான் இருக்கிறது. மழை பெய்யும்போது காற்று வீசினால் இந்த மரங்கள் முறிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வலுவிழந்த ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்களை வெட்டி அகற்றிவிட்டு அதற்கு பதிலாக கூடுதலாக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்.
மணிமாறன், ராம்நகர்.
குடிநீர் வரவில்லை
கோவை போத்தனூர் ஜி.டி. டேங் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்து 17 நாட்களுக்கும் மேல் ஆகிறது. இதனால் இந்த பகுதியில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. வசதி படைத்தவர்கள் பணம் கொடுத்து குடிநீர் வாங்கிவிடுகிறார்கள். ஆனால் ஏழை-எளிய மக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். சிலர் காலிக்குடங்களுடன் தண்ணீரை தேடி அலையும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த பகுதிக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும்.
ரோஸ், போத்தனூர்.
பழுதான சாலை
கோவை காந்திபார்க்கில் உள்ள பள்ளி பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து வீரகேரளம் மூங்கில்தூர் பஸ் நிறுத்தம் வரை சாலை மிகவும் பழுதடைந்து படுமோசமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயத்துடன் உயிர் தப்பித்து செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
நாகராஜ், கோவை.
வர்ணம் இல்லாத வேகத்தடை
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள சாலையில் சந்திப்பு பகுதியில் பல இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப் பட்டு உள்ளன. ஆனால் அவை மீது வர்ணம் பூசாமல் இருக்கிறது. இதனால் புதிதாக இந்த வழியாக செல்பவர்களுக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் இருப்பதால் விபத்தில் சிக்கி காயங்களுடன் உயிர் தப்பித்து செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே இங்குள்ள வேகத்தடைகளில் வெள்ளை நிற வர்ணம் பூச வேண்டும்.
சந்தோஷ்குமார், மகாலிங்கபுரம்.
விபத்து ஏற்படும் அபாயம்
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி அருகே சாலை அகலப்படுத்தப் பட்டது. இதனால் ஆஸ்பத்திரி முன்பு தடுப்புகள் கொண்டு தற்காலிக ரவுண்டானா அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இரவு நேரத்தில் அங்கு வரும் வாகன ஓட்டிகள் அந்த ரவுண்டானாவுக்குள் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
கேசவமூர்த்தி, பொள்ளாச்சி.