காஞ்சீபுரத்தில் சர்ச்சைக்குரிய ஜீவ சமாதி இடத்தில் பக்தர்கள் வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்படும்

காஞ்சீபுரத்தில், சர்ச்சைக்குரிய ஜீவசமாதி இடத்தை கோர்ட்டு உத்தரவுகளை ஆய்வு செய்தபின்னர் பக்தர்கள் வழிபடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.;

Update:2022-04-12 14:20 IST
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம், காமராஜர் சாலையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஜீவசமாதி அடைந்துள்ள லிங்காயத் சமுதாயத்தை சார்ந்த அர்ஜுனன் சமாதி இடம் குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் வைரலாக செய்திகள் வந்துக் கொண்டிருந்தன.

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-

காஞ்சீபுரம், காமராஜர் சாலையில் அமைந்துள்ள பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஜீவசமாதி அடைந்துள்ள லிங்காயத் சமுதாயத்தை சார்ந்த அர்ஜுனன் சமாதியும் இந்த இடத்தில் அமைந்துள்ளது. இதில் அவருடைய குலதெய்வமான வீரபத்ர சுவாமியும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட ஈஸ்வரனும், இந்த இடத்தில் வீற்றிருக்கின்றன. இந்த இடம் கல்மடம் என்று வருவாய்த்துறை பதிவேடுகளில் இருக்கிறது.

பல ஆண்டுகளாக 7 தலைமுறையை சார்ந்தவர்கள், செங்கல்பட்டு சார்பு கோர்ட்டிலும், செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் பல்வேறு வழக்குகள் தொடந்த பின்னும், இந்த இடம் தனிப்பட்டோருக்கா அல்லது லிங்காயத் சமுதாயத்தை சார்ந்த அறக்கட்டளைக்கு சொந்தமானதா என்பதை மாவட்ட கோர்ட்டில் சென்று முடிவெடுக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு, இது தனிப்பட்ட நபருக்கோ, இந்து சமய அறநிலையத்துறை சார்ந்தவர்களோ இதில் தலையிடக்கூடாது என்று உத்தரவு வந்ததாக இப்போது இந்த இடத்தை பராமரித்து வருபவர்கள் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

இது குறித்த வழக்கினுடைய அனைத்து நகல்களையும் தாக்கல் செய்யுமாறு இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. அதனுடைய நகல்கள் பெற்றபின்பு சட்டதுறையினரோடு ஆலோசனை செய்து அதன்பிறகு அரசு தரப்பிலே முழுமையாக கோர்ட்டு உத்தரவுகளை பரிசீலித்து இந்து சமய அறநிலையத்துறை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அவர்கள் தாக்கல் செய்கின்ற நகல்களை வைத்து மேல்நடவடிக்கை எடுத்து இந்த இடத்தை எடுக்கின்ற முயற்சியில் இறங்குவதா? அல்லது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர விரும்பினால் அதை எடுத்து முழுவதுமாக புனரமைத்து பக்தர்கள் வந்து வழிபடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது ஜி.செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், க.சுந்தர், இந்து சமய அறநிலையத்துறையின் மண்டல இணை ஆணையர் ஜெயராமன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மேலும் செய்திகள்