கிணத்துக்கடவு பகுதியில் பலத்த மழை சூறாவளி காற்றால் தென்னை மரங்கள் சாய்ந்தன
கிணத்துக்கடவு பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் தென்னை மரங்கள் சாய்ந்தன. இதில் ஏராளமான வீடுகள் சேதமாகின.;
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் தென்னை மரங்கள் சாய்ந்தன. இதில் ஏராளமான வீடுகள் சேதமாகின.
பலத்த மழை
கிணத்துக்கடவு பகுதியில் கோடைவெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. காலையிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்த நிலையில் மதியத்துக்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்ததால் குளிர்ந்த காற்று வீசியது.
இந்த நிலையில் பிற்பகல் 3 மணியளவில் திடீரென்று இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை ஓரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அத்துடன் வாகனங்களில் செல்பவர்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.
தென்னை மரங்கள் சாய்ந்தன
தொடர்ந்து பெய்த மழை காரணமாக பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் பெரிதும் அவதியடைந்தனர். அவர்கள் நினைந்தபடி சென்றனர்.
மேலும் கிணத்துக்கடவு அருகே உள்ள நெம்பர் 10 முத்தூர், தேவராயபுரம், சூலக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.
மழையின்போது சூறாவளி காற்று வீசியது. இதனால் தேவராயபுரத்தில் பல இடங்களில் புளியமரம், மாமரம், வேப்பமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வேருடன் கீழே சாய்ந்தன. அதுபோன்று 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் முறிந்து கீழே விழுந்தன.
வீடுகள் சேதம்
அதுபோன்று பல வீடுகளுக்கு முன்பு வளர்க்கப்பட்ட தென்னை உள்ளிட்ட மரங்கள் வீடுகள் முன்பு சாய்ந்தன. இதனால் 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் சேதமாகின.
அத்துடன் சூறாவளி காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சில வீடுகளின் முன்பு போடப்பட்டு இருந்த இரும்பு சீட்டுகள் காற்றில் பறந்தன.
ஞானவேல் (வயது 40) என்பவர் வீட்டின் முன்பு இருந்த தென்னை மரம் முறிந்து வீட்டுக்குள் விழுந்தது.
நல்ல வேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதுபோன்று கிருஷ்ணவேணி என்பவர் வீட்டின் முன்பு இருந்த மா மரம் முறிந்ததால் பசுமாடு காயம் அடைந்தது.
மின்இணைப்பு துண்டிப்பு
மேலும் இந்த பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவரது தோட்டத்தில் உள்ள வாழை மரங்கள், தென்னை மரங்கள் சூறாவளி காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் கீழே சாய்ந்தது.
மேலும் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்ததால், மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக தேவராயபுரம் கிராமம் இருளில் மூழ்கியது.
இதனால் இந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா, கிராம நிர்வாக அலுவலர் மாரிச்செல்வம், ஊராட்சி தலைவர் சுந்தரி தங்கவேல் மற்றும் பலர் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சரிசெய்யும் பணி
தொடர்ந்து சேதம் அடைந்த தென்னை மரங்கள், மா மரங்கள் உள்ளிட்ட மரங்களை கணக்கெடுக்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அதை சரிசெய்யும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
சுல்தான்பேட்டை அருகே உள்ள எஸ்.குமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏ.டி. காலனியில் அய்யம்மாள் (65) என்பவரின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் வீட்டில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.