சூளேஸ்வரன்பட்டியில் குழி தோண்டினாங்க ஆனா இன்னும் சரிசெய்யல அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் குடிநீர்
சூளேஸ்வரன்பட்டியில் குழி தோண்டியும் இன்னும் சரிசெய்யாததால் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக குடிநீர் வீணாகி வருகிறது.;
பொள்ளாச்சி
சூளேஸ்வரன்பட்டியில் குழி தோண்டியும் இன்னும் சரிசெய்யாததால் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக குடிநீர் வீணாகி வருகிறது.
குடிநீர் குழாயில் உடைப்பு
பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு உள்ள மக்களுக்கு அம்பராம்பாளையம் ஆழியாற்றில் இருந்து தண்ணீரை எடுத்து சுத்திகரித்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வால்பாறை ரோட்டில் இருந்து சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு செல்லும் வழியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி சாக்கடை கால்வாய் வழியாக செல்கிறது. குழாய் உடைப்பை சரிசெய்வதற்கு குழி மட்டும் தோண்டப்பட்டு உள்ளது. ஆனால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாமல் உள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
வீணாகும் குடிநீர்
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு செல்லும் சாலை வழியாக குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாயில் கடந்த சில நாட்களுக்கு உடைப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்ய குழி தோண்டப்பட்டது. ஆனால் சரிசெய்யும் பணிகள் தான் இன்னும் நடக்கவில்லை.
இதன் காரணமாக தினமும் குடிநீர் வீணாகி கொண்டு இருக்கிறது. இந்த வழியாகதான் அலுவலகத்துக்கு அதிகாரிகள் செல்ல வேண்டும். அவர்கள் தண்ணீர் வீணாக செல்வதை பார்த்துவிட்டுதான் செல்கிறார்கள். ஆனால் இதுவரை அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.
சரிசெய்ய வேண்டும்
தற்போது பொள்ளாச்சி பகுதியில் உள்ள பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க இங்கு தண்ணீர் யாருக்கும் பயனில்லாமல் வீணாக வெளியேறுவதை பார்க்க வேதனையாக இருக்கிறது.
எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாகாமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.