வால்பாறையில் சொத்துவரி உயர்வை மறுஆய்வு செய்ய வேண்டும் நகரசபை கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

வால்பாறையில் சொத்துவரி உயர்வை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று நகரசபை கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினார்கள்.;

Update:2022-04-13 00:05 IST
வால்பாறை

வால்பாறையில் சொத்துவரி உயர்வை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று நகரசபை கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினார்கள். 

அவசர கூட்டம்

வால்பாறை நகராட்சியின் அவசர கூட்டம் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடந்தது. தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செந்தில்குமார், நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் வால்பாறை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்துவரி உயர்த்துவது தொடர்பான அரசாணை விதிமுறைகள் குறித்து ஆணையாளர் சுரேஷ்குமார் கூறினார். மேலும் வரியை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

மறுஆய்வு செய்ய வேண்டும்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 17-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் மணிகண்டன் வெளிநடப்பு செய்தார். பின்னர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் பேசும்போது, வரிஉயர்வு குறித்து அரசு வெளியிட்டு உள்ள அரசாணையை வளர்ச்சி பணிகளின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொள்கிறோம். 

அதே நேரம் வால்பாறை பகுதியில் தற்போது நிலவும் பொருளாதார சிக்கல், தொழில் பாதிப்பு, வருவாய் இழப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சொத்துவரி உயர்வை மறுஆய்வு செய்ய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றனர். 

கோடைவிழா

தொடர்ந்து நடந்த விவாதத்தில் வால்பாறையில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்யும் தொழில்வரியை ரத்து செய்ய வேண்டும் அல்லது தோட்ட நிர்வாகங்களே தொழில்வரியை செலுத்த தீர்மானம் கொண்டு வர வேண்டும்  

சோலையாறு அணை பகுதியை சுற்றி உள்ள பகுதிகளுக்கு முறையான குடிதண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும். அனைத்து தேயிலை தோட்ட நிர்வாகங்கள் தங்களது தேயிலை தோட்ட பகுதியில் சட்ட விரோதமாக நடத்தக்கூடிய தங்கும் விடுதிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

படகு இல்லம், தாவரவியல் பூங்காவை உடனடியாக திறப்பதுடன், அடுத்த மாதத்தில் கோடைவிழா கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் வலியுறுத்தினார்கள்.

மேலும் செய்திகள்