பாசன கால்வாய்களில் தண்ணீர் திருடினால் கடும் நடவடிக்கை பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
பாசன கால்வாய்களில் தண்ணீர் திருடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.;
பொள்ளாச்சி
பாசன கால்வாய்களில் தண்ணீர் திருடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
அதிகாரிகள் ஆய்வு
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு பெரியணை, அரியாபுரம், வடக்கலுர், காரப்பட்டி, பள்ளிவிளங்கால் ஆகிய கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பெரியணை கால்வாயில் இருந்து தண்ணீர் திருடி விற்பனை செய்வதாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து உதவி பொறியாளர் கார்த்திக் கோகுல், வருவாய் ஆய்வாளர் கற்பகவள்ளி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தண்ணீர் திருட்டு
அப்போது ஆயின் என்ஜின் மூலம் தண்ணீரை திருடி கிணற்றில் நிரப்பி அதை வியாபார நோக்கிற்கு பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஆனைமலையில் பெரியணை கால்வாய் கிராசிங்கில் உள்ள பட்டா நிலத்தில் அரணி வாய்க்கால் மூலம் தண்ணீர் திருடி அதை கிணற்றிற்கு கொண்டு சென்று உள்ளனர். பின்னர் கிணற்றில் இருந்து நீரை எடுத்து தென்னை நார் தொழிற்சாலை மற்றும் கோழி பண்ணைகளுக்கு விற்பனை செய்ததாக தெரிகிறது.
கடும் நடவடிக்கை
இதையடுத்து தண்ணீர் திருட பயன்படுத்திய ஆயின் என்ஜினை மற்றும் குழாய்களை அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் கணேசன் என்பவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
எனவே பாசனத்திற்கு செல்லும் தண்ணீரை திருடுவது தெரியவந்தால் சம்பந்தபட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர் திருடுவது குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தாராளமாக புகார் செய்யலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.