சென்னை கோவை மாநகராட்சிகளை விட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி அதிகம்

சென்னை, கோவை மாநகராட்சிகளை விட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி அதிகமாக உள்ளது. எனவே வரி உயர்வை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.;

Update:2022-04-13 18:05 IST
பொள்ளாச்சி

சென்னை, கோவை மாநகராட்சிகளை விட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி அதிகமாக உள்ளது. எனவே வரி உயர்வை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

வரி உயர்வால் பாதிப்பு

உள்ளாட்சி அமைப்புகளுக்கான சொத்து வரியை தமிழக அரசு கடந்த 1-ந்தேதி முதல் உயர்த்தி உள்ளது. அதன்படி பொள்ளாச்சி நகராட்சியில் 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதமும், 601 முதல் 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், 1201 முதல் 1800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும், 1800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.
தற்போது உள்ள சொத்து வரியில் வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டிடங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்தப்படுகிறது. சொத்து வரியின் மூலம் நகராட்சிக்கு கூடுதலாக வருமாய் கிடைத்தாலும், பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் வரி உயர்வை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

மக்களிடம் கருத்து கேட்பு

பொள்ளாச்சி நகராட்சியில் கடந்த 2008-ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 2018-ம் ஆண்டு 18 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டு, பின்னர் வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் நகரில் வீட்டு வாடகை உயருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரி மூலம் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுகிறது. அதற்காக பொதுமக்களை பாதிக்கும் வகையில் வரியை உயர்த்த கூடாது.
தற்போது சொத்து வரி குறைந்தபட்சம் ரூ.4515 முதல் அதிகபட்சம் ரூ.7224 வரை உயர்த்தப்படுகிறது. இதேபோன்று சுமார் 1000 சதுர அடி கொண்ட வணிக கட்டிடங்களுக்கு ரூ.18060 செலுத்தி வரும் நிலையில், புதிய வரி உயர்வால் இருமடங்கு வரி செலுத்த வேண்டிய இருக்கும். இதே கோவை, சென்னை மாநகராட்சிகள் மற்றும் மற்ற நகராட்சிகளை காட்டிலும் பொள்ளாச்சி நகராட்சியில் வரி உயர்வு அதிகமாக உள்ளது. எனவே மக்களிடம் ஆட்சபணை கருத்துக்களை கேட்டு, நகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசு அனுப்பி வைத்து வரி உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கூடுதல் வருவாய்

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி நகராட்சியில் 25 ஆயிரத்து 722 கட்டிடங்களுக்கு சொத்து விதிக்கப்படுகிறது. தற்போது சொத்து வரி மூலம் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.11 கோடியே 94 லட்சத்து 21 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. இது ரூ.20 கோடியாக உயருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதேபோன்று அனைத்து வரி இனங்களும் சேர்த்து நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.26 கோடியே 47 லட்சத்து 86 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. தற்போது வரி உயர்வு மூலம் ஆண்டுக்கு ரூ.50 கோடி வரை கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரி உயர்வு குறித்து பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பரிசீலனை செய்து, அரசுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்