கோவையில் தடுப்புச்சுவரில் காா் மோதியதில் பீஸ்ட் படம் பார்க்க சென்ற விஜய் ரசிகர் பலி 3 பேர் படுகாயம்

கோவையில் அதிகாலையில் தடுப்புச்சுவரில் கார் மோதியதில் பீஸ்ட் படம் பார்க்க சென்ற விஜய் ரசிகர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update:2022-04-14 00:18 IST
கோவை

கோவையில் அதிகாலையில் தடுப்புச்சுவரில் கார் மோதியதில் பீஸ்ட் படம் பார்க்க சென்ற விஜய் ரசிகர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த பயங்கர விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விஜய் ரசிகர்கள் 

கோவை நஞ்சுண்டாபுரம், சந்தோஷ் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருடைய மகன் கவுசிக் (வயது 21). கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய கவுசிக், சொந்தமாக தொழில் செய்து வந்தார்.

இவருடைய நண்பர் பிரீத்வி (20), உறவினர் கனிஷ்கா, அவரது தோழி நிவேதா. இவர்கள் 4 பேரும் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்கள் ஆவார்கள். இந்த நிலையில் விஜய் நடித்த பீஸ்ட் படம்  அதிகாலை கோவையில் உள்ள தியேட்டர்களில் வெளியானது. 

கார் தடுப்புச்சுவரில் மோதியது

இதையடுத்து கவுசிக் உள்பட 4 பேரும் அதிகாலை 4 மணிக்கான முதல் காட்சிக்கு டிக்கெட் முன்பதிவு செய்தனர். இதற்காக அவர்கள் 4 பேரும்  அதிகாலையில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டனர். 

பிறகு 4 பேரும் காரில் தியேட்டருக்கு புறப்பட்டனர். காரை கவுசிக் ஓட்டினார். அவர் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அதிகாலை 2.45 மணிக்கு வாலாங்குளம்-உக்கடம் பைபாஸ் சாலையில் வந்தபோது, திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவற்றில் மோதியது. 

ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்

பின்னர் நிற்காமல் சென்ற கார், சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதி நின்றது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல நொறுங்கியது. இதனால் காரை ஓட்டி வந்த கவுசிக் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

அதுபோன்று காருக்குள் இருந்த பிரீத்வி, கனிஷ்கா, நிவேதா ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். 

போலீசார் விசாரணை

மேலும் இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் கோவை கிழக்குப்பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 

பின்னர் அவர்கள் பலியான கவுசிக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்