கோவை ரெயில் நிலையத்தில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ42 லட்சம் நகை பணம் பறிமுதல்
கோவை ரெயில் நிலையத்தில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.42 லட்சம் நகை- பணத்தை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
கோவை
கோவை ரெயில் நிலையத்தில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.42 லட்சம் நகை- பணத்தை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் கண்காணிப்பு
கோவை-திருப்பதி இடையே சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கோவை ரெயில் நிலையம் வந்தது. இதில் பயணம் செய்தவர்கள் ரெயிலை விட்டு இறங்கி சென்று கொண்டிருந்தனர்.
அங்கு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பயணிகளை கண்காணித்தபடி இருந்தனர். அப்போது ரெயிலில் இருந்து இறங்கிய ஒருவர் சந்தேகத்துக்கு இடமாக கையில் பையுடன் வந்தார். உடனே போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
ஒருவரை பிடித்து விசாரணை
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபர் வைத்திருந்த பையை வாங்கி அதற்குள் சோதனை செய்தனர். அப்போது அந்த பைக்குள் காகிதத்தால் சுற்றப்பட்ட நிலையில் ரூ.11 லட்சத்து 85 ஆயிரத்து 790 மற்றும் ரூ.30 லட்சம் தங்க நகைகள் இருந்தன.
உடனே போலீசார் அந்த நபரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் அவர், கோவை திருநகர் அருகே உள்ள குறிஞ்சி கார்டனை சேர்ந்த உதயானந்தம் (வயது 50) என்பது தெரியவந்தது.
நகை, பணம் பறிமுதல்
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ராஜவீதியில் நகை கடை வைத்து நடத்தி வருவதும், இங்கிருந்து தங்க நகைகளை தயாரித்து திருப்பதிக்கு சென்று அங்கு விற்பனை செய்து விட்டு மீதமுள்ள நகை மற்றும் பணத்துடன் கோவை வந்தது தெரியவந்தது.
ஆனால் அவரிடம் பணம்-நகை கொண்டு வந்ததற்கான உரிய ஆவணங்கள் இல்லை. எனவே ரூ.42 லட்சம் நகை, பணத்தை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து உதயானந்தத்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.