தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-;

Update:2022-04-14 00:49 IST
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:- 

ஒளிராத தெருவிளக்கு

கூடலூர் போக்குவரத்து சிக்னல் அருகே ஊட்டி - மைசூரு சாலையில் அரசு சுகாதார மருத்துவமனை மற்றும் தோட்டமூலா சாலை செல்லும் சந்திப்பு பகுதியில் உள்ள தெரு விளக்குகள் கடந்த ஒரு மாதமாக ஒளிருவது இல்லை. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். இது குறித்து பலமுறை அதிகாரிகளை சந்தித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே அதிகாரிகள் ஒளிராத விளக்குகளை ஒளிர வைக்க வேண்டும்.
கலீம், கடலூர்.

தெருநாய்கள் தொல்லை

  பொள்ளாச்சி- மீன்கரை சாலையில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலைய வளாகம் மற்றும் வெளிப்புறத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கூட்டங்கூட்டமாக நடமாடும் தெருநாய்கள் பயணிகளை துரத்தவும் செய்கிறது. எனவே இங்கு வந்து செல்லும் பயணிகளின் நலன்கருதி ரெயில் நிலையத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.
  ரஞ்சித், பொள்ளாச்சி.

பஸ்கள் நிற்பதில்லை

  கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டர்மில் பஸ் நிறுத்தத்தில் பெண்களுக்காக இயக்கப்படும் இலவச அரசு டவுன் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றுவது இல்லை. இதனால் இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பெண் பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் இங்கு காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு பஸ்களை நிறுத்தி பெண் பயணிகளை ஏற்றிச்செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
  ஸ்டெல்லா மேரி, கோவை.

குண்டும்-குழியுமான சாலை

  கோவையை அடுத்த கோவைப்புதூரில் உள்ள தனியார் கல்லூரி அருகே சாலை பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
  கண்ணன், கோவைப்புதூர்.

போலீஸ் நிலையம் வேண்டும்

  கோவை கணபதி பகுதியில் மணியகாரன்பாளையம், உடையாம்பாளையம், அஞ்சுகம் நகர் உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளன. இங்கு ஏரளாமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் போலீஸ் நிலையத்துக்கு சரவணம்பட்டிக்குதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கணபதி பகுதியிலேயே போலீஸ் நிலையம் அமைக்க அரசு முன்வர வேண்டும்.
  பழனிசாமி, கணபதி.

விபத்தை ஏற்படுத்தும் தடுப்பு 

  கோவையை அடுத்த வடவள்ளியில் இருந்து தொண்டாமுத்தூர் செல்லும் சாலையில் பி.எம்.சாமி காலனி சந்திப்பு பகுதியில் இரும்பு தடுப்பு வைக்கப்பட்டு உள்ளது. இது கடந்த 2 வருடமாக எவ்வித பயனும் இல்லாத நிலையில்தான் இருக்கிறது. ஏன் இங்கு இந்த தடுப்பை வைத்தனர் என்று தெரியவில்லை. இதனால் இங்கு அடிக்கடி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த தடுப்பை அகற்றி, பயனுள்ள இடத்தில் வைக்க வேண்டும்.
  சோமசுந்தரம், கலிக்கநாயக்கன்பாளையம்.

பழுதான சாலை
கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் தொடக்கம் முதல் சர்ச் சாலை வரை ஆங்காங்கே சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயத்துடன்  தப்பித்து வருகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
ராமகிருஷ்ணன், ராமநாதபுரம். 

போக்குவரத்து நெரிசல்

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை பூங்கா எதிரே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. ஆனால் இங்கு வாகன நிறுத்தத்தை வைக்காமல் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி வைத்து அதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இதனால் இங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.
கந்தசாமி, மகாலிங்கபுரம். 

விபத்து ஏற்படும் அபாயம்

பொள்ளாச்சி நகரில் சாலை விரிவாக்கம் செய்து 3 இடங்களில் ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த பகுதியில் ஒருவழிப்பாதையில் எதிரே சிலர் வாகனங்களை ஓட்டி வருகிறார்கள். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்து விதிகளை மீறி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிகண்டன், பொள்ளாச்சி. 

சாலையில் மண்மேடு

பொள்ளாச்சி உடுமலை சாலையில் தேர்நிலைத்திடல் அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்ய சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் குழாய் சரிசெய்யப்பட்டதும் அங்கு சாலை அமைக்காமல் மண் போட்டு மூடிவிட்டு சென்று விட்டனர். இதனால் அந்தப்பகுதி மண்மேடாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
விஜயகுமார், சூளேஸ்வரன்பட்டி.  

  

மேலும் செய்திகள்