பெட்ரோல் டீசல் வரியை குறைக்காமல் பாஜனதா அரசு மதவாதத்தை தூண்டுகிறது கோவையில் கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி
பா.ஜனதா அரசு பெட்ரோல், டீசல் வரியை குறைக்காமல் மதவாதத்தை தூண்டுவதாக கோவையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.;
கோவை
பா.ஜனதா அரசு பெட்ரோல், டீசல் வரியை குறைக்காமல் மதவாதத்தை தூண்டுவதாக கோவையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த சட்டம்
கோவை விமானநிலையத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவில் குறிப்பாக கர்நாடகா மாநிலத்தில் நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும்போது இந்தியாவிற்கு சமத்துவம் மிகவும் அவசியம்.
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து கொண்டு பள்ளிக்கு, கல்லூரிக்கு செல்லக்கூடாது, தேர்வு எழுத முடியாது என்கின்றனர். தமிழக முதல்-அமைச்சர் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்ததை முழுமையாக வரவேற்கிறேன்.
தற்போதைய நிதி மந்திரி, பிரதமர் இருக்கும் வரை விலைவாசி குறையாது. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தால் மற்ற அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது. பொருளாதார சுமையை சாதாரண மக்கள் மீது, மத்திய அரசு சுமத்தி வருகின்றது.
பணமதிப்பிழப்பு
கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதும் மத்திய அரசு விலையை குறைக்கவில்லை. ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., என தொழில்நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு இருந்தன.
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் எந்த நிதியையும் மத்திய அரசு கொடுக்கவில்லை. பஞ்சு இறக்குமதியில் 10 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும்.
பா.ஜனதா அரசு பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் வரியை குறைக்காமல், மதவாதத்தை தூண்டும் செயல்களில் ஈடுபடுகிறது. இந்தியா முழுவதும் பா.ஜனதாவிற்கு அடுத்து 19 முதல் 20 சதவீத வாக்குகளை வைத்திருக்கும் கட்சி காங்கிரஸ்.
மேலும் பா.ஜனதா கட்சிக்கு அடுத்தப்படியாக அதிக சட்டமன்ற உறுப்பினர்களை காங்கிரஸ் வைத்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.