பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுவதால் பொள்ளாச்சி பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது
பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுவதால் பொள்ளாச்சி பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என்று பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கூறினார்.;
பொள்ளாச்சி
பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுவதால் பொள்ளாச்சி பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என்று பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கூறினார்.
ரேஷன் கடை திறப்பு
பொள்ளாச்சி நகராட்சி 19-வது வார்டில் ரேஷன் கடைக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. ரேஷன் கடையை திறந்து வைத்தார். இதில் கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா, அ.தி.மு.க. நிர்வாகிகள் அருணாசலம், கனகராஜ், காளிமுத்து, ஊஞ்சை கந்தவடிவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர். பின்னர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பொள்ளாச்சி நகராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்தவர்கள் இருந்த போது வரி உயர்த்தப்பட்டது. அதன்பிறகு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வரி உயர்த்தவில்லை.
இடமாற்றம் செய்யக்கூடாது
வரியை உயர்த்துவதால் வீட்டு வாடகை உயரும், குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சிறிய கடை வைத்திருக்கும் வியாபாரிகளும் பாதிக்கப்படுவார்கள். தேர்தலில் வெற்றியை கொடுத்த பொள்ளாச்சி மக்களுக்கு தி.மு.க. பரிசாக வரியை உயர்த்தி உள்ளது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது என்பதால் அரசு ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் பிரிவில் கூடுதலாக 4 தளங்களும், மகப்பேறு பிரிவில் 3 தளங்களும் கட்டும் பணிகளை தாமதப்படுத்தி வருகின்றனர். மேற்குபுறவழிச்சாலை, பாலக்காடு நான்கு வழிச்சாலை பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. மேலும் கோவைக்கு மாற்றுபாதை அமைக்க ரூ.100 ஒதுக்கீடு செய்த நிலையில், தேர்தலினால் டெண்டர் ரத்தானது. எனவே மேற்கண்ட பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்று சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து உள்ளேன். பொள்ளாச்சி பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்தால் பொதுமக்களும், வியாபாரிகளும் பாதிக்கப்படுவார்கள். எனவே பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே தேவராயபுரத்தில் சூறாவளி காற்றால் பாதிக்கப்பட்ட வீடுகளையும், தென்னை மரங்களையும் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் திருஞானசம்பந்தம், தேவராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி தங்கவேல், துணைத் தலைவர் கிருஷ்ணன், ஒன்றியக் கவுன்சிலர் தாமரை தென்னரசு, கிராம நிர்வாக அலுவலர் மாரிசெல்வம், விக்ரம், சண்முகம் உள்பட பலர் உடன் இருந்தனர்.