கிணத்துக்கடவு பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை 170 தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன

கிணத்துக்கடவு பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் 170 தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. மின்வினியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.;

Update:2022-04-14 20:52 IST
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் 170 தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. மின்வினியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். 

சூறாவளிக்காற்றுடன் மழை

கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் கோடை வெயில் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை இருந்தது. இதன்காரணமாக பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். இந்தநிலையில் திடீரென கிணத்துக்கடவு பகுதியில் சூறாவளிக்காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக ஏராளமான தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. 
மேலும் வீடுகளும் சேதமடைந்தது. மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மின்சாரம் இன்றி சிரமப்பட்டனர். 

170 தென்னை மரங்கள் 

இதுபற்றி அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கு சென்று சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 தினங்களுக்கு பிறகு பொதுமக்களுக்கு சீராக மின்வினியோகம் வழங்கப்பட்டது.  இந்தநிலையில் கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா, கிராம நிர்வாக அலுவலர்கள் மாரிச்செல்வம், ஜீவானந்தம், பாலதண்டாயுதபாணி, சற்குணம் மற்றும் அதிகாரிகள் தேவராயபுரம் கிராமத்திற்கு சென்று சூறாவளி காற்றால் பாதிப்பு ஏற்பட்டதை நேரில் பார்வையிட்டு கணக்கெடுப்பு நடத்தினர்.இதில் சூறாவளி காற்றால் 16 வீடுகள் பாதிக்கப்பட்டன. அதே போல் காற்றுக்கு தாக்கு பிடிக்காமல் 170-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம் அடைந்தது. மேலும் நூற்றுக்கணக்கான வாழைகளும் முறிந்து நாசம் ஆனது. 

நடவடிக்கை

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- கோடை மழை சூறாவளிக்காற்றுடன் பெய்துள்ளது. இதனால் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகள், தென்னைகள் முறிந்து விழுந்து சேதமடைந்து உள்ளன. அதனால் எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்