அனுமதியின்றி அம்பேத்கர் சிலை வைக்க முயற்சி

வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் அனுமதியில்லாமல் அம்பேத்கர் சிலையை வைக்க முயற்சி நடந்தது. அந்த சிலையை போலீசார் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2022-04-14 20:52 IST
வால்பாறை

வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் அனுமதியில்லாமல் அம்பேத்கர் சிலையை வைக்க முயற்சி நடந்தது. அந்த சிலையை போலீசார் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பேத்கர் சிலையை வைக்க முயற்சி

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பல்வேறு இடங்களில்  அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் வால்பாறை நகராட்சி அலுவலக நுழைவு வாயில் பகுதியின் முன்பு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவ படத்திற்கு கவுன்சிலர்கள் உள்பட பல்வேறு கட்சினரும், பொது மக்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் வால்பாறை பகுதியை சேர்ந்த வக்கீல் சிவசுப்பிரமணியன், தனியார் வாகனத்தில் சுமார் 5 அடி உயரத்தில் 500 கிலோ எடை கொண்ட அம்பேத்கர் சிலையை கொண்டு வந்தார். அந்த சிலையை அவர் நகராட்சி அலுவலகத்தின் முன் இறக்கி வைப்பதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

பறிமுதல்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ், அனுமதி இல்லாமல் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சிலையை வைக்கக்கூடாது என்று தடுத்து நிறுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் மற்றும் வால்பாறை போலீசார் அங்கு சென்று, அனுமதி பெறாமல் அம்பேத்கர் சிலையை நகராட்சி அலுவலகம் முன்பு வைக்கக்கூடாது என்று கூறியதோடு, அம்பேத்கர் சிலையை பறிமுதல் செய்தனர். 

பேச்சுவார்த்தை

இதுபற்றி அறிந்ததும் வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், நகராட்சி அலுவலகத்திற்கு வந்து சிலையை வைக்க முயன்ற வக்கீல் சிவசுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர், சிலையை எனது வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக தனியார் வாகனத்தில் கொண்டு வந்து நகராட்சி அலுவலகம் முன்பு வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தேன். ஆனால் நகராட்சி அலுவலகம் முன்பு சிலையை வைக்கப்போவதாக கூறி நகராட்சி நிர்வாகத்தினர் புகார் தெரிவித்துள்ளதாக கூறினார். இதற்கு துணை சூப்பிரண்டு, சிலையை எந்த இடத்தில் வைப்பது என்பதை உறுதி செய்து அதற்கான உரிய அனுமதி பெற்று வந்தால் சிலை ஒப்படைக்கப்படும். அதுவரை அம்பேத்கர் சிலை வால்பாறை தாசில்தார் கட்டுப்பாட்டில் இருக்கும். இதுகுறித்து வால்பாறை தாசில்தாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.

பரபரப்பு

இதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட அம்பேத்கர் சிலை வால்பாறை தாசில்தார் அலுவலகத்தில் உள்ள அறையில் வைத்து பூட்டி வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் விசாரணை நடத்தி வருகிறார். அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலையை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் வால்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்