மாடு விடும் விழா நடத்த எதிர்ப்பு ஊராட்சி மன்ற தலைவியை கண்டித்து சாலை மறியல்

மாடு விடும் விழா நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால் ஊராட்சி மன்ற தலைவியை கண்டித்து சாலை மறியல் நடந்தது.

Update: 2022-04-14 16:23 GMT
கே.வி.குப்பம்

மாடு விடும் விழா நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால் ஊராட்சி மன்ற தலைவியை கண்டித்து சாலை மறியல் நடந்தது.

மாடு விடும் விழா நடத்த எதிர்ப்பு

கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த மாளியப்பட்டு கிராமத்தில் மாடு விடும் விழா நடத்துவது குறித்து இருவேறு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது. இவர்களில் ஊர் மேட்டுக்குடி நவீன்குமார் தரப்பினர் மாடுவிடும் திருவிழாவுக்கு முறையாக அனுமதி பெற்றிருந்தனர். 
ஊராட்சி மன்ற தலைவி லட்சுமி தங்கள் தரப்பினரை இந்த விழா நடத்துவதில் சேர்க்கவில்லை என்றும், இருதரப்பினரையும் ஒன்று சேர்த்தால் மட்டுமே மாடு விடும் திருவிழா நடத்த வேண்டும், இல்லை யென்றால் விழா நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் மனு அளித்திருந்தார். 

சாலை மறியல்

இது தொடர்பாக கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் இரு தரப்பினரும் கலந்துகொண்ட அமைதி குழு கூட்டம் நடைபெற்றது. நீண்ட நேரம் நடந்த இந்த கூட்டத்தில் இருதரப்பினர் இடையே தீர்வு காணாமலேயே கூட்டம் முடிந்தது.  இதைத்தொடர்ந்து நவீன்குமார் தரப்பினர் ஊருக்கு திரும்பியதும் பனமடங்கி பஸ் நிறுத்தம் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தாசில்தார் து.சரண்யா, லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சி.சுப்பிரமணி மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது அனுமதியின்படி மாடு விடும் விழாவை நாளை (சனிக்கிழமை) நடத்திக் கொள்ளலாம் என்று உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்