பஞ்சுக்கு இறக்குமதி வரி ரத்து எதிரொலி தவிப்பில் இருந்து தப்பிக்கும் நூற்பாலை தொழில்
பஞ்சுக்கு இறக்குமதி வரி ரத்து எதிரொலியாக தவிப்பில் இருந்து நூற்பாலை தொழில் தப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.;
கோவை
பஞ்சுக்கு இறக்குமதி வரி ரத்து எதிரொலியாக தவிப்பில் இருந்து நூற்பாலை தொழில் தப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நூல் விலை உயர்வு
பஞ்சு விலை தொடர்ந்து தாறுமாறாக அதிகரித்து வருகிறது. 356 கிலோ பஞ்சு கொண்ட ஒரு கண்டி விலை ரூ.95 ஆயிரமாக அதிகரித்து உள்ளது.
சிறு மற்றும் நடுத்தர பிரிவை சேர்ந்த நூற்பாலைகள் இந்த விலை உயர்வு பிரச்சினையால் மிகுந்த நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதனால் நூல் உற்பத்தியும் குறைந்துள்ளது.
வரலாறு காணாத பஞ்சு விலை உயர்வு காரணமாக நாடு முழுவதும் ஜவுளி தொழில் மிகுந்த நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
நிலைமையை சமாளிக்க முடியாமல் தமிழகத்தில் மொத்தம் உள்ள 2 ஆயிரம் சிறு மற்றும் நடுத்தர நூற்பாலைகளில் 1000 நூற்பாலைகளில் தினசரி நூல் உற்பத்தி 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது செயற்கை தட்டுப்பாடு காரணமாக பஞ்சு விலை தாறுமாறாக அதிகரித்து உள்ளது.
வரவேற்பு
ஆகவே மத்திய அரசு பஞ்சு இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள 10 சதவீத வரியை உடனடியாக நீக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இல்லா விட்டால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என்கிற நிலையும் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஜவுளித் தொழில் துறையினரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு வெளிநாட்டு இறக்குமதி வரியை ரத்து செய்து உள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை வரி நீக்கப்பட்டு உள்ளது என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறியதாவது:-
வரலாறு காணாத அளவில் பஞ்சு விலை உயர்ந்ததால் ஜவுளி துறை முடங்கும் அபாயத்தில் இருந்தது. மத்திய அரசு பஞ்சு மீதான வெளிநாட்டு இறக்குமதி வரியை ரத்து செய்து அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது.
தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்றார்.
விலை குறையுமா?
இது குறித்து சிஸ்பா சங்க தலைவர் ஜெ.செல்வன் கூறியதாவது:-
வரலாறு காணாத பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த, 10 சதவீதம் இறக்குமதி வரியை ரத்து செய்ய மத்திய அரசிடம் கோரி இருந்தோம்.
இதனை ஏற்று மத்திய நிதித்துறை வருகிற 30.9.2022 வரை பஞ்சின் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை முற்றிலும் ரத்து செய்துள்ளது. இதற்கா பிரதமர் மோடி, ஜவுளித்துறை மந்திரி பியூஷ்கோயல், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இதனை பரிந்துரை செய்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இறக்குமதி வரி ரத்து மூலம் வெளிநாட்டு பஞ்சு இறக்குமதியாகி இந்தியாவில் நூல்விலை குறைந்து, ஜவுளித்துறையின் நெருக்கடி தீரும் என்றார்.
எது எப்படியோ இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால்...நெருக்கடியில் சிக்கிய சிறு, நடுத்தர நூற்பாலைகளின் நிலை மாறி, நிம்மதி ஏற்படும் என்றும், தவிப்பில் இருந்து தப்பிக்கும் என்றுமற் எதிர்பார்க்கப்படுகிறது.