சித்திரை விஷூ பண்டிகை கேரளா செல்ல உக்கடம் பஸ் நிலையத்தில் குவிந்த பயணிகள்

சித்திரை விஷூ பண்டிகையையொட்டி கேரளா செல்வதற்காக கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் ஏரளாளமான பயணிகள் குவிந்தனர். ஆனால் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டதால் அவர்கள் கடும் அவதி அடைந்தனர்.;

Update:2022-04-14 23:28 IST
கோவை

சித்திரை விஷூ பண்டிகையையொட்டி கேரளா செல்வதற்காக கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் ஏரளாளமான பயணிகள் குவிந்தனர். ஆனால் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டதால் அவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

சித்திரை விஷூ பண்டிகை

கோவை மாவட்டத்தில் ஏராளமான மலையாளிகள் வசித்து வருகின்றனர். கோவை உக்கடத்தில் இருந்து கேரளாவின் பாலக்காடு, திருச்சூர் உள்பட பல்வேறு நகரங்களுக்கு தமிழக அரசு சார்பில் 20-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர கேரள அரசு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கேரள மக்களின் முக்கிய பண்டிகையான விஷூ பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவையில் வசிக்கும் கேரள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குன சென்று வருகின்றனர்.

உக்கடம் பஸ் நிலையத்தில் குவிந்தனர்

இந்த நிலையில்  முதலே கேரளா செல்வதற்காக ஏராளமான பயணிகள் கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் குவிந்தனர். ஆனால் கோவை-கேரளா இடையே குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

 இதனால் அவர்கள் பஸ் கிடைக்காமல் பயணிகள் நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கைக்குழந்தைகளுடன் வந்திருந்த பெண்கள் கால் வலிக்க அங்கேயே காத்து கிடந்தனர். 

கூட்டம் அதிகமாக இருந்ததால் பஸ் வந்ததும் பயணிகள் ஓடி சென்று பஸ்சில் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். இதன் காரணமாக அவர்கள் கடும் அவதியடைந்தனர்.

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம்

 இதேபோல் தொடர் விடுமுறை காரணமாக கோவையில் வசிக்கும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் கடந்த 2 நாட்களாக குவிந்தனர். பயணிகள் கூட்டத்தினால் அரசு பஸ்கள் நிரம்பி வழிந்தன.

இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. கோவையில் இருந்து நெல்லை மற்றும் தென்காசி செல்ல கட்டணமாக ரூ.1,300 முதல் ரூ.1,500 வரை வசூலிக்கப்பட்டன.

 இதேபோல் சென்னை செல்வதற்கும் சாதரண நாட்களை விட  கூடுதலாக ஒரு டிக்கெட்டிற்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தி வசூலிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, கோவையில் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கின்றனர். எனவே பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் கூடுதல் பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்