தமிழ் புத்தாண்டையொட்டி மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை
தமிழ் புத்தாண்டையொட்டி மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;
வடவள்ளி
தமிழ் புத்தாண்டையொட்டி மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் புத்தாண்டு
கோவையை அடுத்த மருதலையில் பிரசித்து பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடாக போற்றப்படுகிறது.
இங்கு தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி காலை 6 மணிக்கு கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி மற்றும் வள்ளி, தெய்வானைக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து சுவாமிக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதன் பின்னர் சித்திரை புத்தாண்டையொட்டி சுவாமி கனி காணும் நிகழ்ச்சி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. சித்திரைமாத பிறப்பை முன்னிட்டு கருவறை முன்புறம் உள்ள மண்டபம் முழுவதும் வாழை, மா, ஆப்பிள் ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழவகைகளால் அலங்கரிக்க ப்பட்டிருந்தது.
தங்க மயில் வாகனத்தில் வீதிஉலா
அதனைத்தொடர்ந்து 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், உச்சிகால பூஜையும், மதியம் 12 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை சமேதராக தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வந்தார்.
இதேபோல் இடும்பன் சுவாமி, பாம்பாட்டி சித்தர் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி தங்க ரதத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தார்.
தமிழ்புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோவிலுக்கு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசியைில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு பணியில் வடவள்ளி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.
இதேபோல வடவள்ளியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இங்கு மாலையில் குருபெயர்ச்சியை முன்னிட்டு ேகாவிலில் உள்ள குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பேரூர் மாசாணியம்மன் கோவில்
பேரூர் செட்டிபாளையத்தில் மாசாணியம்மன் கோவில் உள்ளது. பேரூர் பட்டீசுவரர் கோவிலின் உபகோவிலான, இக்கோவிலில் சித்திரைக் கனி வழிபாடு சிறப்பாக நடப்பது வழக்கம்.
காலை 6 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு, மாசாணி அம்மனுக்கு அனைத்து வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள் வைத்து சிறப்பு அலங்கார பூஜை மற்றும் மகா தீபாராதனை வழிபாடுகள் நடந்தன.
இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்துச் சென்றனர்.